‘ரெட்ரோ’ (விமர்சனம்) சூரியாவுக்காக பார்க்கலாம்!

தூத்துக்குடியில் பெரிய தாதாவாக இருப்பவர் ஜோஜு ஜார்ஜ். இவரது அரவணைப்பில் தாய், தந்தையை இழந்த சூரியா வளர்ந்து வருகிறார். கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில், ஜோஜூ ஜார்ஜை மிஞ்சும் அளவிற்கு செயல்படுகிறார். ஒரு கட்டத்தில் தனது காதலி பூஜா ஹெக்டேவுக்காக திருந்தி வாழ முயற்சிக்கிறார். இது, ஜோஜு ஜார்ஜுவுக்கு பிடிக்கவில்லை. அதோடு கடத்தப்பட்ட ஒரு பொருளை சூரியா மறைத்து விடுகிறார். இதனால் இருவருக்கும் இடையே பகை உருவாகிறது.

சூரியா – பூஜா ஹெக்டேவுக்கு திருமணம் நடக்கும் சமயத்தில், ஜோஜு ஜார்ஜ் – சூரியா இருவருக்குள்ளும் சண்டை நடக்கிறது. அந்த சண்டையின் போது, ஜோஜு ஜார்ஜ் பூஜா ஹெக்டேவை வெட்ட முயற்சிக்கிறார். அப்போது, ஜோஜு ஜார்ஜுவின் கையை சூரியா வெட்டிவிடுகிறார். இதனால், சூரியா சிறைக்குச் செல்கிறார். அவரிடம் இருந்து பூஜா ஹெக்டே விலகிச் செல்கிறார். தன் சகாக்கள் மூலம் பூஜா ஹெக்டேவைத்தேடிவருகிறார், சூரியா.

பூஜா ஹெக்டே அந்தமானில் இருப்பதாக சூர்யாவுக்கு தெரிய வருகிறது. அதனால், சூரியா சிறையிலிருந்து தப்பித்து அந்தமான் செல்கிறார். அங்கே, சூரியா வாழ்க்கையில் நடந்த ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அது என்ன? சூரியா – பூஜா ஹெக்டே இருவரும் இணைந்தனரா? ஜோஜு ஜார்ஜ் என்ன செய்தார்? என்பதை ரெட்ரோ ஸ்டைலில் சொல்வது தான் இந்த ரெட்ரோ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

சூரியா இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு சில காட்சிகளைத் தவிர, சிரிக்காமல், அடங்கா கோபத்துடன், சண்டைக்காட்சிகளில் தனது முழு பலத்தினையும் காட்டியிருக்கிறார். அவரது ஆட்டம், ரசிகர்களையும் எழுந்து ஆட்டம் போட வைக்கிறது. முழு படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார்.

பூஜா ஹெக்டே,  வழக்கமான சினிமா ஹீரோயினுக்கு என்ன வேலை உண்டோ, அதை செய்திருக்கிறார். பாடல் காட்சியில் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ்  மிரட்டியிருக்கிறார். கிங் மைக்கேலாக நடித்திருக்கும் நாசர், அவரது மகனாக நடித்திருக்கும் விது சிறப்பாக நடித்திருக்கிறார். அரசியல் வாதியாக பிரகாஷ்ராஜ், இயக்குநர் தமிழ், கருணாகரன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட். திரையில் பார்க்கும் போதும் சூப்பராக இருக்கிறது. ஆனால் பின்னணி இசை காட்சிகளுக்கேற்றபடி இல்லை.

ஒளிப்பதிவாளர் ஸ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு சிறப்பு! ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டைலிஷாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ரெட்ரோ காலக்கட்டத்தை காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், திரைக்கதையில் கூடுதல் சுவாரசியம் ச்சேர்த்திருக்கலாம். சூரியாவின் அம்மா செண்டிமெண்ட் காட்சிகளெல்லாம் கொடுமை! படம் பார்ப்பவர்களிடம் எந்த தாக்கத்தினையும் ஏற்படுத்தவில்லை.

நடிக்க தெரிந்த ஒரு நடிகரை எப்படி வீணாக்கலாம்! என்ற வித்தை, இயக்குநர் கார்த்திக் சுப்பு ராஜூக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது!!!

‘ரெட்ரோ’ – சூரியாவுக்காக பார்க்கலாம்!