‘குதிரைவால்’ –  விமர்சனம்.

‘யாழி பிலிம்ஸ்’  சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்துள்ள படம் குதிரைவால். அறிமுக இரட்டை இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் இணைந்து இயக்கி உள்ளனர். இயக்குனர் பா.ரஞ்சித் தனது ‘நீலம் புரடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் மூலமாக வெளியிட்டு இருக்கிறார்.

கலையரசன், அஞ்சலி பாட்டீல் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க சேத்தன், ஆனந்த்சாமி, செளமியா, மானசா, பரிதிவாலன், ஆறுமுகவேல், லட்சுமி பாட்டி, ஆதிரா பாண்டிலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்திய திரையுலகிலேயே, தமிழ் திரையுலகில் மட்டுமே பரீட்சார்த்தமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அப்படி பலவிதமான கதைக்களங்களோடு வரும் சில படங்கள் பெரும் வெற்றியை பெரும்.

இதன் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு பரீட்சார்த்தமான முயற்சியாக வெளிவந்துள்ள படம் குதிரைவால். கியூபிசம் (Cubism, Modern art) என்ற வகையிலான படமாகக் கூட இதை கருதலாம். திரையுலகில் இதுவரை கண்டிராத, ஒரு வித்தியாசமான திரைப்படமாக வெளிவந்துள்ளது. எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

எப்போதும் போல தூங்கி எழும் கலையரசனுக்கு ஒரு நாள் கண் விழிக்கையில் தனக்கு வால் முளைத்திருப்பதை கண்டு குழப்பம் அடைகிறார். ஒருசிலர் அதை கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஒரு சிலர் அவரை வித்தியாசமாக பார்க்கின்றனர். இதற்கு தீர்வு தேடி அலையும் போது அவருடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களே திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

கலையரசன் ஆரம்பக் காட்சியிலிருந்து  தனக்கு வால் முளைத்த காரணத்தை தேடி அலையும் கதைக்கும், கதாப்பாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கிறார். வால் முளைத்த பிறகு வாலின் அசைவுக்கு ஏற்றார் போல சிலிர்ப்பது  சிறப்பு.

கலையரசன் குதிரை ‘வாலின்’ காரணம் தேடிசெல்லும் பயணம் முழுவதிலும் கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது. பல கிளைக்கதைகள்  மூலம் திரைக்கதையை நகர்த்தி சென்றாலும் கவனிக்கத்தக்க வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

அதிமேதாவித்தனமான கூறுகளுடன் கதை , திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்  இராஜேஷ் . அவரின் கதைக்கேற்றபடி  இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் இருவரும் சிறப்பான பங்கினை கொடுத்துள்ளனர்.

பிண்ணனி இசை மற்றும் ஒலி வடிவமைப்பு ஃப்ராய்டின் மனசிக்கல்களுக்கு ஏற்றவாறு கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.  அந்தோனி ரூபன்  கலையரசனின் காதுகளில் கேட்கும் ஒலிகள் முதல் மலைகளில் கேட்கப்படும் பிரத்தியேக ஒலிகள் வரை அனைத்தையுமே அப்படியே உணர வைக்கிறார். பாடகர் பிரதீப் குமார் இசையப்பாளராகவும் தமிழ் சினிமா உலகில் முக்கிய இடம் பிடிப்பார்.

‘மாடர்ன் ஆர்ட்’ எனப்படும் நவீன ஓவியங்கள் எப்படி எல்லோருக்கும் புரியாதோ, அதேபோல் தான் இந்தப்படமும். கிறுக்கல்களைக் கண்டு சிலாக்கிப்பதற்கு என்றே ஒரு பெருங்கூட்டமே இருக்கிறது.

வேறொரு சிந்தனைத் தளத்தில் சிலர் பேசுவதும், எழுதுவதும் பலருக்கு  புரிவதில்லை. மோனாலிசாவின் சிரிப்பில் உள்ள மர்மமே இன்னும் பலருக்கு புரியாத நிலையில், ‘குதிரைவால்’ மாதிரியான படங்களை புரிந்துகொள்ள நுட்பம் வேண்டும். அதற்கு இன்னும் பல படங்களும், காலமும் வேண்டும்.