‘செங்களம்’ – இணையத் தொடர் விமர்சனம்!

கலையரசன், வாணி போஜன், ஷாலி ,சரத் லோகிதஸ்வா, பிரேம், டேனியல் அன்னி போப், லகுபரன், வேல.ராமமூர்த்தி, கஜராஜ், அர்ஜய், ‘பக்ஸ்’ பகவதி பெருமாள், சு.செந்தில்குமரன், விஜி சந்திரசேகர், மானசா ராதாகிருஷ்ணன், பூஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்க ‘செங்களம்’ இணையத் தொடரினை, எழுதி இயக்கியிருக்கிறார், எஸ் ஆர் பிரபாகரன்.

வினோதய சித்தம், விலங்கு, அயலி போன்ற பல வெற்றி தொடர்களை தொடர்ந்து, ‘செங்களம்’ இணையத் தொடர் ஜீ 5 தமிழ் OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது.

தனது கட்சிக்காக உயிர் கொடுத்த முக்கிய பிரமுகரின் ரத்தம் காய்வதற்குள், கொலை செய்த அந்த கட்சியினரிடமே கூட்டணி வைப்பது தான் தமிழக அரசியல். தமிழகத்தில் அரசியல் கொலைகள் என்பது சர்வ சாதாரணமானது. அதிகாரத்திற்காகவும், பதவிக்காகவும் கட்சிகளும் அரசியல் பிரமுகர்களும் எந்த எல்லைக்கும் செல்லும் பண்புள்ளவர்கள். இப்படிபட்ட ஒரு கதைக் களத்தை தேர்வு செய்து 40 வருட தமிழக அரசியலில் நடந்த ஒரு சில நிகழ்வுகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, ‘செங்களம்’  இணையத் தொடர் எப்படி இருக்கிறது பார்க்கலாம்.

பரம்பரை பரம்பரையாக, விருதுநகர் மாவட்டத்தின் நகராட்சியை  தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், சரத் லோகிதாஸ்வா குடும்பத்தினர். இந்த பரம்பரை ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு, எம்.எல்.ஏ, வேல. ராமமூர்த்தி தலைமையிலான கும்பல் வேலை செய்து வருகிறது. இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கலையரசனும் அவரது தம்பிகளான, டேனியல் அன்னி போப், லகுபரன் ஆகியோர், முக்கிய அரசியல் பிரமுகர்களை தொடர் கொலை செய்து வருகிறார்கள். இவர்களை உயிருடனோ அல்லது சுட்டுப்பிடிக்கவோ முயற்சி செய்து வருகிறது, அர்ஜய் தலைமையிலான போலீஸ் படை. இதன் பிறகு நடக்கும் டிவிஸ்ட்டுகள் நிறைந்த சம்பவங்களின் தொடர்ச்சி தான், 9 பாகங்களை கொண்ட ‘செங்களம்’ வெப் தொடர்.

‘செங்களம்’ தொடரின் டைட்டிலும், அந்த டைட்டில் காட்சிக்கான தரணின் இசையும், ஒரு திக் திக் மன நிலையை உருவாக்கி விடுகிறது. அதன் பிறகு வரும் காட்சிகள் செங்களம் தொடரினை, தொடர்ந்து பார்க்கும் ஆவலை உருவாக்கி விடுகிறது.

ஒரே கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அனைத்து கதாபாத்திரங்களையும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குனர் எஸ். ஆர். பிரபாகரன். ஆனால், வாணிபோஜன் நடித்துள்ள சூர்யகலா கதாபாத்திரமும், ஷாலி நிவேகாஸ் நடித்துள்ள நாச்சியார் கதாபாத்திரமும் அனைவரது கவனத்தையும் எளிதில் ஈர்த்துவிடுகிறது. இருவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.

சக்கர நாற்காலியில் வீட்டை சுற்றி வந்தபடியே அரசியல் செய்யும் சரத் லோகிதஸ்வாவும் கவனம் ஈர்க்கிறார்.

அரசியல் பிரமுகர்களை கொலை செய்யும் ராயர் கதாபாத்திரத்தில், கலையரசன் கவனிக்கும் படி நடித்துள்ளார். அவருடன் சேர்ந்து கொலை செய்யும், அவரது தம்பிகளாக நடித்திருக்கும் டேனியல் அன்னி போப் மற்றும் லகுபரன் நடிப்பிலும் குறைவில்லை!

மானசா ராதாகிருஷ்ணனின் அப்பாவாக நடித்துள்ள பத்திரிக்கையாளர் சு. செந்தில்குமரன், வேல.ராமமூர்த்தி, கஜராஜ், அர்ஜய், ‘பக்ஸ்’ பகவதி பெருமாள், விஜி சந்திரசேகர், மானசா ராதாகிருஷ்ணன், பூஜா வைத்தியநாதன் என அனைவருமே குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

வசனங்களும் பாராட்டும்படி இருக்கிறது. குறிப்பாக கஜராஜ் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்ட நிலையில் தனது கட்சியின் தலைமை குறித்து பேசும் வசனம், இன்ஸ்பெக்டர் அர்ஜை – கலையரசன் இருவருக்கிடையே நிகழும் வசனம், ஆகியவற்றை சொல்லலாம்.

இவற்றில் ஹைலைட் வசனம் அடிமட்ட தொண்டனின் ‘உரிமை’ குறித்த வசனம் தான்!

ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு ஃப்ரேமுக்குள்ளும் வலுக்கட்டாயமாக தினிக்கப்பட்ட மக்கள் கூட்டம் வழிகிறது!

சஸ்பென்ஸுடன் இறுதிவரை தொடரும் திரைக்கதையும், அதற்கேற்ற எடிட்டிங்கும் செங்களத்தின் பலம்.

மற்றபடி கேலிக்கூத்தான காட்சிகளும் இருக்கிறது. சான்றாக விஜி சந்திரசேகரை கொலை செய்யும் காட்சியை சொல்லலாம். ஆள் அரவமற்ற காட்டில் எளிதாக கொலை செய்ய வாய்ப்பிருந்தும் கொலையாளிகள் நாடகமாடுவது, பெரும் கேலிக்கு உட்பட்ட காட்சி!

அதேபோல் வேல. ராமமூர்த்தியை கொலை செய்யும் காட்சியையும் சொல்லலாம். போலீஸ் ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி தேடும் கொலை குற்றவாளி டேனியல் அன்னி போப். அவர் ஊருக்குள் வரும் வரை முகத்தை மறைக்காமல், வேலராமமூர்த்தி வீட்டுக்குள்ளும் முகத்தை மறைக்காமல் இருந்துவிட்டு, துப்பாக்கியால் சுடும் போது மட்டும் முகத்தை மறைத்தபடி சுட்டுவிட்டு எளிதாக தப்பித்தும் விடுகிறார். இது போல் இன்னும் சிலகாட்சிகளும் இருக்கிறது!

இன்னும் ஒரு எபிசோட் எடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.

பல கேள்விகள் எஞ்சியநிலையில், ‘செங்களம்’ க்ளைமாக்ஸ் இல்லாமல் முடிகிறது.