விட்னஸ் – விமர்சனம்!

தூய்மைப்  பணியாளர்களின் வாழ்க்கையை  மையமாகக்  கொண்டு உருவாகி யிருக்கும் படம், ‘விட்னஸ்’. இதில் நடிகை ரோகினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவருடன் ஷ்ரத்தா ஶ்ரீநாத், அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

விட்னஸ் படத்தினை ‘தி பீப்பிள் மீடியா பேக்டரி’ சார்பாக டி.ஜி.விஷ்வ பிரசாத்.தயாரிக்க, விவேக் குச்சி போட்லா. இணைந்து தயாரித்துள்ளார். அறிமுக  இயக்குநர்  தீபக் இயக்கி இருக்கிறார். கதை மற்றும் திரைக் கதையை  முத்துவேல்  மற்றும் ஜே.பி.சாணக்யா ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.

விட்னஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் சோனி ஓடிடி தளத்தில்  வெளியாகியிருக்கிறது.

பல கனவுகளோடு தனது அம்மா இந்திராணியுடன் (ரோகினி), வாழ்ந்து வரும் இளைஞன் பார்த்திபன். அவனது கனவுகள் கைகூடும் நேரத்தில், வலுக்கட்டாயமாக கழிவுநீர்த் தொட்டிக்குள் இறக்கப்பட்டு பலி கொடுக்கப்படுகிறான்.

இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த, துப்புரவுப் பணியாளரான பார்த்திபனின் அம்மா, இந்திராணி (ரோகினி) முயற்சி செய்கிறார். அவர் முயற்சி என்னவானது, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா? என்பதே, அரசு, அதிகாரிகள் உள்ளடக்கிய சமுதாயத்தின் முன்பு, விடைதேடி, விஸ்வரூபம் எடுத்து நிற்கும்! ‘விட்னஸ்’ படத்தின் கதை.

இதற்கு முன்னர் சில படங்கள் துப்புறவுத் தொழிலாளிகளின் பிரச்சனையை பேசியிருந்தாலும், விட்னஸ், துப்புறவுத்தொழிலாளிகளின் அவல நிலையை, மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறது.

மனித கழிவுகளை, மனிதன் சுத்தம் செய்வதற்கான தடையினை அரசு விதித்திருந்தாலும், அதை செயல்படுத்துவதில் எப்படி மெத்தனம் காட்டிவருகிறது என்பதை ஜட்ஜாக நடித்தவரும், வழக்கறிஞராக நடித்த சண்முகராஜாவும் நார் நாராக கிழித்திருக்கிறார்கள். இந்தக்காட்சியில் இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடித்த இளைஞர், படம் பார்ப்பவர்களின் மனதினை எளிதாக கவர்ந்து விடுகிறார். அவரது அம்மாவாக நடித்திருக்கும் ரோகிணி, ஷ்ரத்தா ஶ்ரீநாத் உள்ளிட்ட நடிகர், நடிகையர் ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

முத்துவேல் மற்றும் ஜேபி சாணக்யாவின் திரைக்கதை,  க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்பாக செல்கிறது. எழுதி ,இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கும் தீபக், முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார்.

இதுவரை அரசுப் பதவியில் இருந்தவர்களும், இருப்பவர்களும், இருக்க விரும்புவர்களும் ‘விட்னஸ்’ படத்தினை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.