யானை – விமர்சனம்!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி, யோகிபாபு, ராமச்சந்திர ராஜூ, போஸ் வெங்கெட், சஞ்சீவ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் யானை. இப்படத்தை ‘டிரம்ஸ்டிக் புரடக்‌ஷன்ஸ்’ சார்பினில் சக்திவேல் தயாரித்திருக்கிறார்.

பணபலமிக்க அருண் விஜய்யின் குடும்பத்தினருடன் உண்டான பகை காரணமாக பழிதீர்த்துக்கொள்ள தக்க சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறது, எழுத்தாளர் வ. ஐ. ச. ஜெயபாலன் குடும்பம். இதற்கு காவல் அரணாக இருந்து தடுத்து வருகிறார் அருண் விஜய். இந்நிலையில் அருண் விஜய் குடும்பத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தால் அவர் வீட்டை விட்டு வெளியேற்றப் படிகிறார். இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை.

யானை, டைட்டிலுக்கேற்றபடி அருண் விஜய்யின் தோற்றம் அடிதடி ஆக்‌ஷனுக்கு அட்டகாசமாக பொருந்துகிறது. படம் முழுவதும் வரும் ஆக்‌ஷன் காட்சிகளில் ஆர்ப்பரிக்கிறார். காதல் காட்சிகள் குறைவு தான் என்றாலும் வரும் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார்.

அருண் விஜய்யின் காதலியாக வரும் பிரியா பவனி சங்கர் காலம் காலமாக வரும் தமிழ் சினிமாவில் உலா வரும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சில காட்சிகளில் மனம் கவருகிறார். படத்திற்கு இவர் எந்தவிதத்திலும் பலம் சேர்க்கவில்லை!

அருண் விஜய்யின் மூத்த அண்ணனாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி அப்படியே நாடி, நரம்பு எல்லாம் ஜாதி வெறி ஊறி இருக்கும் மனிதராக பிரதிபலித்திருக்கிறார். அலட்டலில்லாத சிறப்பான நடிப்பு. அவருடன் சேர்ந்து நடித்திருக்கும் போஸ் வெங்கட், சஞ்சீவ்  ஆகியோர் கிடைத்த இடங்களில் நன்றாகவே நடித்துள்ளனர்.

அருண் விஜய்யின் அம்மாவாக நடித்திருக்கு ராதிகா சரத்குமார் அதே வழக்கமான நடிப்பினில் மின்னுகிறார்.  அவர் நடிக்கும் காட்சியில் பெண்களின் கண்களில் கண்ணீர் கொட்டும்.

‘கே.ஜி.எப்’  படத்தின் கம்பீர வில்லன் ராமச்சந்திர ராஜு  இந்தப்படத்தில் பரிதவித்து உள்ளார். பெரிய வில்லனாக பில்டப் கொடுத்து சொதப்பியுள்ளனர். தோற்றத்துக்கேற்ற காட்சிப்படுத்தல் இல்லாததால் காட்சிகளில் வலிமை இல்லை.

கமெடிக்காக களமிறக்கப்பட்ட யோகி பாபு  நடித்த காட்சிகளில், ஒரு சில காட்சிகள் மட்டுமே வெடிச்சிரிப்பினை வரவழைக்கிறது.. மற்ற காட்சிகள் அனைத்தும் காமெடி என்ற பெயரில் வதைத்து எடுக்கிறார்கள்.

இயக்குனர் ஹரி, தனது வழக்கமான ஒரே பாணியிலான மசாலா டெம்ப்ளேட்டில் இந்தப் படத்தினையும் இயக்கியிருக்கிறார். படம் பார்க்கும்போது அவர் இயக்கிய பல படங்கள் நினைவுக்கு வந்து போகிறது. பறக்கும் கார்களையும், ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் எடிட்டிங்கையும் தவிர்த்த இயக்குனர் ஒரே பாணியிலான திரைக்கதையினையும் தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் இயக்குனர் ஹரியின் படத்தினை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு இந்தப்படமும் பிடிக்கும்!

Leave A Reply

Your email address will not be published.