அடங்க மறு – விமர்சனம்

இயக்குனர் சரண், மிஷ்கின், அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கும் படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி, ராஷிகண்ணா இணைந்து நடித்துள்ளனர். ஜெயம் ரவி போலீஸ் வேடமேற்று நடிக்கும் 3 வது படம். எப்படியிருக்கிறது?

துடிப்பான, திறமையான, நவீன ‘சைபர் க்ரைம்’ சமாச்சாரங்களை கரைத்து குடித்த இளைஞர். இந்த நேர்மை தவறாத போலீஸ் எஸ் ஐ. அழகான குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர். தன்னுடன் பணிபுரியும் சக மேலதிகாரிகளால் அவரது குடும்பம் சின்னா பின்னமாகிறது. நிலைகுழைந்து நிற்கும் ஜெயம் ரவி என்ன முடிவு எடுத்தார் என்பது தான் இந்த அடங்க மறு.

எத்தனையோ படங்களில் பார்த்த அதே திருடன், போலீஸ் கதை தான். இருந்தாலும் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் வித்தியாசமாக கொடுக்க முயன்றுள்ளதை பாராட்டியே ஆகவேண்டும்.

திறமையான பல நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கு ‘OBEY THE ORDER’ என்ற இந்த ஒற்றை வார்த்தை தான் கடிவாளம். இந்த கடிவாளத்தால் போலீஸால் பாதுகாக்கப் பட வேண்டிய சமுதாயம் எப்படி சீரழிக்கப்படுகிறது என்பதை அறிமுக இயக்குனர் அருமையாக சொல்லியிருக்கிறார்.

டிராஃபிக்கை மதிக்காமல் செல்லும் மந்திரி மகனை விரட்டி செல்லும் போது வேகமெடுக்கும் திரைக்கதை, அதன் பின்னர் காணாமல் போகிறது. வியப்பாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல வேண்டிய விஷயங்கள் கொட்டாவி விடும் அளவிற்கு சொல்லப்படுவதால் ரசிக்க முடியவில்லை.

விஞ்ஞானத்தின் அசூர வளர்ச்சியில் திரைக்கதையில் சொல்லப்பட்ட விஷயங்கள் சாத்தியமென்றாலும் அது சொல்லப்பட்ட விஷயத்தில் நம்பிக்கை ஏற்படவில்லை. உதரணமாக க்ளைமாக்ஸில் நடக்கும் சம்பவத்தை சொல்லலாம். ஹாக்கிங் செய்யும் போது ஏற்படும் பரபரப்பு மிஸ்ஸிங்!!!

ஒளிப்பதிவு, இசை மற்ற டெக்னிக்கல் விஷயங்களில் பிரமிப்பை ஏற்படுத்திய இயக்குனர் திரைக்கதையை கண்டுகொள்ளவில்லை!!!

மற்றபடி ஜெயம் ரவி ராஷி கண்ணா இடையேயான கூடல், ஊடல் அழகு. அதேபோல் ஜெயம் ரவியின் குடும்ப பின்ணனியும் அழகாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. மற்ற அனைத்தும் வழக்கமான சம்பிரதாயங்களே!

திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் ‘அடங்க மறு’ பெயருக்கேற்றபடி கம்பீரமாக இருந்திருக்கும்.

Comments are closed.