விஷ்வத், சுனைனா, நாகா விஷால், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன், ராமசந்திரன் துரைராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ராக்கெட் டிரைவர். எழுதி இயக்கியிருக்கிறார், ஸ்ரீராம் ஆனந்தசங்கர். ஸ்டோரீஸ் பய் தி ஷோர் நிறுவனம் சார்பில், அனிருத் வல்லப் தயாரித்துள்ளார். இசை – கௌஷிக் க்ரிஷ், ஒளிப்பதிவாளர் – ரெஜிமெல் சூர்யா தாமஸ்.
A. P. J. அப்துல் கலாமின் தீவிரமான ரசிகன் விஷ்வத். அவரைப்போலவே விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்து வருகிறார். நேரம் கிடைக்கும் போது ஆட்டோ ஓட்டி வருகிறார். ஒரு நாள், சிறு வயதில் இருக்கும் அப்துல் கலாமை (நாகா விஷால்)சந்திக்க நேருகிறது. முதலில் நம்ப மறுக்கும் விஷ்வத் அதன் பிறகு நம்பத் துவங்குகிறார். மறைந்த அப்துல் கலாம், எதற்காக சிறு வயது தோற்றத்துடன் வந்தார் என்பதே ‘ராக்கெட் டிரைவர்’ படத்தின் ஃபேண்டஸி கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
எல்லாவற்றிலும் நேர்த்தியும், ஒழுங்கும் இருக்க வேண்டும் என்ற கொள்கையுடைய விஷ்வத், கனவினை அடைய முடியாத ஏக்கம், விரக்தி என அவரது கதாபாத்திரத்திற்கான உணைவுகளை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.
சிறு வயது அப்துல் கலமாக நடித்திருக்கும் நாகா விஷாலின் தோற்றம், அப்துல் கலாமுடன் ஒத்துப்போவது போல் இருக்கிறது அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சுனைனாவிற்கு சிறிய கதாபாத்திரம். குறை சொல்ல முடியாத நடிப்பு. நாகா விஷாலை மிரட்டும் காட்சியில் ரசிக்க வைக்கிறார்.
அப்துல் கலாமின் நண்பர் சாஸ்திரி கதாபாத்திரத்தில் ‘காத்தாடி’ ராமமூர்த்தி தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கிறார். இவரும், நாகா விஷாலும் தோன்றும் காட்சிகள் ரசனையானவை. முதல் பாதியில் மெதுவாக சென்று கொண்டிருந்த திரைக்கதை ‘காத்தாடி’ ராமமூர்த்தி வந்த பிறகு வேகமும், சுவாரசியமுமாக செல்கிறது.
பெரிய சாதனைகள் படைத்தால் மட்டுமே சந்தோஷம் இல்லை. சின்ன சின்ன விஷயங்களிலும் சந்தோஷம் இருக்கிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார், இயக்குநர் , ஸ்ரீராம் ஆனந்தசங்கர். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.