இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியியலாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம், ராக்கெட்ரி. சிம்ரன், ரவி ராகவேந்திரா, சாம் மோகன், மிஷா கோஷல் உள்ளிட்ட பலர் நடித்திருக்க, கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பதுடன் நம்பி நாரயணனாக நடித்திருக்கும் மாதவன், விஜய் மூலனுடன் இணைந்து தயாரித்துள்ளார்.
விஞ்ஞானி நம்பி நாராயணனை பற்றிய நீண்ட, பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மாதவன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்… அவர் நடிகராக வெற்றி பெற்றிருக்கிறாரா? இல்லை இயக்குனராக வெற்றி பெற்றிருக்கிறாரா? பார்க்கலாம்.
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான நம்பி நாராயணனுக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்து தங்களுக்கு வேலை செய்ய அழைப்பு விடுக்கிறது அமெரிக்கா. ஆனால் அதை உதறித் தள்ளிவிட்டு இந்தியாவுக்கு என சொந்தமாக ஒரு ராக்கெட் எஞ்ஜினை தயாரித்து விட வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு இந்திய விண்வெளி ரகசியங்களை பல கோடிகளுக்கு விற்றுவிட்டதாக ‘தேச துரோக’ வழக்கில் கைது செய்யப்படுகிறார். நடந்தது என்ன? என்பது தான் ராக்கெட்டரி படத்தின் கதை.
இந்தியாவுக்காகவே தன்னை அர்ப்பணித்த ISRO விஞ்ஞானி நம்பி நாராயணனாகவே வாழ்ந்துள்ளார் மாதவன். அவரது தற்போதைய வயதான தோற்றத்தை அப்படியே பிரதிபலித்து ரசிகர்களை பிரமிக்க வைக்கிறார். மாதவன் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் வெற்றி பெற்றிருக்கிறார். ‘ராக்கெட் கவுந்துபோனா ரியாக்ட் பண்ண தெரிந்த சைன்டிஸ்ட்டுகளுக்கு மனுஷன் கவுந்து போனா எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல போல’ என மாதவன் சிபிஐ அதிகாரியாக வரும் கார்த்திக்குமாரிடம் பேசும் காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் வசனங்கள் மாதவனை ஒரு வசனகர்த்தாவாகவும் அடையாளப்படுத்துகிறது. கைதட்டல்களையும் பெறுகிறது. அதேபோல் படத்தில் உயிரோட்டமான காட்சிகள் பல.. சக விஞ்ஞானியான சாம்மோகன் மாதவனை கண்ணத்தில் அறையும் காட்சி, சிம்ரன் மனநிலை பாதிக்கும் போது மாதவன் தடுமாறும் காட்சிகளையும் சொல்லலாம். சில காட்சிகள் கண்ணீர் கசியச்செய்கிறது.
சிம்ரன், சாம் மோகன், ரவி ராகவேந்தர், கார்த்திக்குமார், ஜெகன் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை ரொம்பவும் ஸ்டாராங்க்! ஆர்ட் டைரக்ஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கேமெரா, மியூசிக் என அனைத்தும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. இசையமைப்பாளர் சாம் சி எஸ்சின் மியூசிக் படத்தினை என்ஹான்ஸ் செய்கிறது.
இருந்தாலும், லிப்சிங் பல இடங்களில் மிஸ்ஸிங்! கவனித்திருக்கலாம். ராக்கெட் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாதவர்களுக்கு புரிதலில் சற்று குறை நேரலாம்!
நடிகராக வெற்றி பெற்ற மாதவன் இயக்குனராகவும் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில் ராக்கெட்ரி அதீத சினிமாத்தனம் இல்லாத சிறப்பான படம்! பார்க்கலாம்.