‘ருத்ரன்’ – விமர்சனம்!

நண்பரின் துரோகத்தால் கடனாளியாகிறார், ராகவா லாரன்ஸின் அப்பா நாசர். அந்த கடனை அடைப்பதற்காக லண்டனுக்கு வேலைக்கு செல்கிறார், ராகவா லாரன்ஸ். சில காலம் தன்னுடன் தங்கியிருக்கும் மனைவி ப்ரியா பவானி ஷங்கரை, ராகவா லாரன்ஸ் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் தனது அம்மா பூர்ணிமா பாக்யராஜை கவனித்து கொள்ள சென்னைக்கு தனியாக அனுப்புகிறார்.

இந்நிலையில், ராகவா லாரண்ஸின் அம்மா பூர்ணிமா பாக்யராஜ், இறந்து விட்டதாக அவருக்கு தகவல் கிடைக்கிறது. சென்னைக்கு போன மனைவி ப்ரியாபவானி ஷங்கரிடமிருந்து எந்த தகவலும் கிடைகாத நிலையில், குழப்பத்துடன் சென்னை வருகிறார்.

ராகவா லாரண்ஸ் தனது மனைவி ப்ரியா பவானி ஷங்கரை தேட ஆரம்பித்தவுடன் பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரிய வருகிறது. அது என்ன என்பதே ‘ருத்ரன்’.

பேய் பாதி, ராகவா லாரண்ஸ் மீதி என நடித்து வந்த நிலையில், பேயில்லாமல் ருத்ரன் படத்தில் நடித்திருக்கிறார்.

ராகவா லாரன்ஸ், வழக்கம் போல் அப்பா, அம்மாவுக்கு மரியாதை கொடுக்காமல், ஒரே மதிரியான டெம்ப்ளேட் நடிப்பு! குறும்பு, செல்லம் என்ற பெயரில் கன்றாவி செய்கிறார்!  சில காட்சிகளில் சாராயம் குடிக்கத் தூண்டி, விளம்பரம் செய்கிறார். இவரோட படங்களில் நல்ல டான்ஸ் இருக்கும். அது இதில் மிஸ்ஸிங்!

ப்ரியா பவானி ஷங்கர், அவரது கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார்.

சரத்குமார், சரத் லோஹிதஸ்வா இருவரும் வில்லன்களாக மிரட்டியிருக்கிறார்கள். அதிலும் சரத்குமார் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார்.

நாசர், பூர்ணிமா இருவரின் நடிப்பும் படத்திற்கு பலம்.

ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி, ரசிகர்களை ரிலாக்ஸ் செய்கிறார்.

காளி வெங்கட், இளவரசு, ஜெயப்பிரகாஷ், அபிஷேக் வினோத் ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ் குமாரின் பாடல்களுக்கான இசையும் ஓகே! ஆனால், ‘வீரத்திருமகன்’ படத்தில் இடம்பெற்ற ‘பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்’ என்ற பாடலை ரீ மிக்ஸ் என்ற பெயரில் கொத்துக்கறி போட்டிருக்கிறார்.

சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை வழக்கம் போல் இரைச்சல்! ஒரு சில இடங்களில் பரவாயில்லை!

கே.பி.திருமாறன் எழுதியிருக்கும் அரதப் பழசான கதை, திரைக்கதைக்கு, எந்தவிதமான வித்தியாசமுமில்லாமல் இயக்கியிருக்கிறார்,  இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் வெற்றிப்படங்களின் தயாரிப்பாளர் கதிரேசன்.