கருவறையாக மாறும் ‘தறுதலை’ கிராமம்!  – ‘சான்றிதழ்’ விமர்சனம்!

‘கருவறை’ என்ற கிராமத்தில் வாழும் மக்கள் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் சுத்தமான சுகாதாரத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இதனால், மற்ற கிரமங்களுக்கு முன் மாதிரியாக திகழும் ‘கருவறை’ கிராமத்திற்கு, அரசு ஜனாதிபதி விருதினை அறிவிக்கிறது. இதனை ஏற்க அந்த கிராமத்து மக்கள் மறுக்கிறார்கள். அது ஏன்? எதற்காக? என்பதே சான்றிதழ் படத்தின் கதை.

சந்து பொந்துகள் எல்லாம் சாராயக் கடைகளாகவும், வயதான ஆண், பெண் என வித்தியாசம் இல்லாமல் எப்போதும் சாராய போதை. முறையற்ற ஆண், பெண் உறவுகள், சாப்பாட்டு பொருட்களில் கலப்படம், ஸ்மார்ட் போன், தொலைக்காட்சி சீரியல் ஆதிக்கம் என, சகலமும் விஷமாகி கிடக்கும் அந்த நவீன தறுதலை கிராமத்தை தன்னுயிர் தந்து ‘கருவறை’ கிராமமாக, ஆக்குகிறார், வெள்ளைச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும், ஹரி.

கருவறை போல், இப்படியொரு கிராமம் இருந்தால் நன்றாக இருக்குமே! என ஏங்க வைத்து விடுகின்றனர். ஒவ்வொரு நாடும் இப்படி மாறவேண்டிய நேரத்தில், ஒரு கிராமத்தை மாற்ற முயற்சித்திருக்கிறார், இயக்குநர் ஜெயச்சந்திரன்.

அமைச்சராக ராதாரவி, ரவிமரியா, ரோஷன் பஷீர், ஆஷிகா அசோகன், அருள்தாஸ், கெளசல்யா, ஆதித்யா கதிர், காஜல் பசுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இவர்களில் யாருடைய நடிப்பும் சொல்லும்படியாகவோ, ரசிக்கும்படியாகவோ இல்லை.

மற்ற கெட்ட பழக்கங்களை, உயிரைக்கொடுத்து தடுக்க நினைத்த இயக்குநர் ஜெயச்சந்திரன், சாராயம் குடிப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கட்டிங், என ரேஷனில் கொடுக்கும் இயக்குநரின் யுக்தி அபாரம்!?

காதல் காட்சிகள் குறைவு, அதுவும் ரசிக்கும்படி இல்லை.

ஒளிப்பதிவு, எஸ்.எஸ்.ரவிமாறன். இசை, பிஜு ஜேக்கப்.

பல குறைகளோடு, மனிதர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க, பிரயத்தனம் செய்யச் சொல்லி வலியுறுத்தியிருக்கிறார்கள்.