‘சபாபதி’ : விமர்சனம்.

‘சபாபதி’ படத்தில் ‘திக்குவாய்’ அப்பாவி இளைஞர் கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி வர்மா நடித்திருக்க, இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ஷாயாஜி ஷிண்டே, வம்சி, மயில்சாமி, லொல்லு சபா சாமிநாதன், மாறன், ‘குக்கூ வித் கோமாளி’ புகழ்,  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

RK Entertainment சார்பில் ரமேஷ்குமார் தயாரித்துள்ள இந்தப்படத்தினை ஶ்ரீனிவாசராவ் இயக்கியிருக்கிறார்.

சந்தானம் நடித்து இதுவரை வெளிவந்த டகால்ட்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா ஆகிய படங்கள் ரசிகர்களை பெரிதாக கவராத நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘சபாபதி’ ரசிகர்களை கவர்ந்துள்ளதா, இல்லையா?

சிறுவயது முதலே ‘திக்குவாய்’ பிரச்சனை காரணமாக பலராலும் அவமானப் படுத்தப்படுகிறார் சந்தானம். அவருக்கு பெரிய ஆறுதலாக இருப்பவர் ப்ரீத்தி வர்மா. நெருங்கிய நண்பர்களான இருவரும் எதிரெதிர் வீடுகளில் வசிக்கின்றனர். சந்தானம் அவரையே கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறார். ஆனால் வேலை கிடைத்தால் தான் கல்யாணம் நடக்கும் என்ற சூழ்நிலை. இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் ‘சபாபதி’ படத்தின் கதை.

‘சபாபதி’ கதாபாத்திரத்திற்கேற்ற அருமையான பாடி லாங்குவேஜ். சந்தானம், மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். வெகுளித்தனமாக அவர் செய்யும் செயல்கள் பரிதாபம் ஏற்படுத்துகிறது. இது ஒன்று மட்டுமே படத்தில் சிறப்பு. மற்றபடி எல்லாமே சுத்த பேத்தல்!

சந்தானத்தின் அப்பாவாக ‘கணபதி வாத்தியார்’ என்ற கதாபத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். இயக்குனருக்கு ‘கணபதி வாத்தியார்’ மேல் என்ன கோபமோ? சந்தானத்தின் உதவியோடு அவர் தலையில் வாந்தி எடுக்கவைத்தும், வாயில் மூத்திரம் அடிக்க வைத்தும் கேவலபடுத்தியிருக்கிறார்!!

ஷாயாஜி ஷிண்டே, வம்சி, மயில்சாமி, லொல்லு சபா சாமிநாதன், மாறன், ‘குக்கூ வித் கோமாளி’ புகழ்,  ரமா என படத்தில் நடித்தவர்கள் அனைவரும்  இயக்குனர் என்ன சொன்னாரோ அதை செய்திருப்பதாகவே தெரிகிறது.

ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகம், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் கூட்டணியில் ‘மயக்காதே மாயக் கண்ணா’ பாடல் அருமை. பார்க்கவும், கேட்கவும் சுகமாக இருக்கிறது.

வாந்தி எடுப்பது, வாயில் மூத்திரம் அடிப்பது, காதலியின் அம்மாவை டிக்கியில் எட்டி உதைப்பது இவையெல்லாம் தான் காமெடி என நினைத்து படமாக்கியிருக்கிறார், இயக்குநர் சீனிவாச ராவ்.

மொத்தத்தில், ‘சபாபதி’ சந்தானத்தின் நடிப்பில் வேளியாகியுள்ள இன்னொரு தோல்விப் படம்.