சாக்யா’ முயற்சியால் திருநங்கைகள், நடனக் கலைஞர்களுக்கு கொரோனா- நலத்திட்ட உதவி வழங்கிய ‘மதுரை எக்ஸ்பிரஸ்’ பிரியாணி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் தினக் கூலி வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தங்களின் உணவு தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தன்னார்வலர்கள் பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் சாக்யா அறக்கட்டளை முயற்சியில் நாட்டுப்புறக் கலைஞர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் எக்ஸ்பிரஸ் பிரியாணி அருண்லால், ஐபாக் குடும்ப உணவகம் அரவிந்த் மற்றும் அடோப்ட் ஈவண்ட்ஸ் சுந்தர்ஜி மூலமாக நிவாரணப் பொருட்களைப் பெற்று சாக்யா அறக்கட்டளையின் வழி வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மதுரையில் தெற்குவாசல், ஆரப்பாளையம், பெத்தானியாபுரம் மற்றும் மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் குடியிருந்து வரும் திருநங்கைகள், ஆதரவற்ற பெண்கள், மேடை நடனக் கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் என 100 குடும்பங்களுக்கு அறக்கட்டளையின் முயற்சியால் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. கலந்து கொண்ட அனைவரும் சமூக இடைவெளியைக் கடைபிடித்து நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றனர்.
இந்நிகழ்வில் சாக்யா அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சே. செந்திலிங்கம், அடோப்ட் ஈவண்ட்ஸ் சுந்தர்ஜி, கரிமேடு காவல் நிலைய காவலர் கார்த்திக், அறங்காவலர் சிராஜ், சமூக ஆர்வலர் பிரசன்னா மற்றும் அறக்கட்டளையின் களப்பணியாளர்கள் ராமமூர்த்தி, அர்ஜுன் ராஜ், முத்துப்பாண்டி மற்றும் பிரபா ஆகியோர் கலந்துகொண்டனர்.