கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த தமிழகத்தில் கபசுரக் குடிநீரை அருந்தலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கபசுரக் குடிநீரை மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் சாக்யா அறக்கட்டளையின் மூலம் கீழப்பனங்காடி, மகாலட்சுமி நகர், ஸ்ரீராம் நகர், அழகுமலையான் நகர் மற்றும் முனியாண்டி நகர் ஆகிய பகுதிகளில் வாழும் 200 குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சே. செந்திலிங்கம், அறங்காவலர் சிராஜ், சமூக ஆர்வலர் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டு அனைவருக்கும் கபசுரக் குடிநீரை வழங்கினர்.
பொதுமக்கள், வியாபாரிகள் பலரும் சமூக இடைவெளியைக் கடைபிடித்து ஆர்வமுடன் கபசுர குடிநீரை அருந்திச் சென்றனர். மேலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும், முகக் கவசங்களையும் அறங்காவலர் மலர்க்கொடி வழங்கினார்.
இந்நிகழ்வில் கீழ பனங்காடி குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் முருகானந்தம், செயலாளர் ராஜீ மற்றும் சங்க இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.