‘மேயாத மான்’, ‘ஆடை’ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில், சந்தானம் நடித்து இன்று தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் ஃபேண்டஸி திரைப்படம், ‘குலு குலு’. ‘Circle Box Entertainment’ சார்பில், எஸ்.ராஜ்நாராயணன் தயாரித்துள்ள இப்படத்தில் சந்தானத்துடன் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, மகாநதி சங்கர், பிரதீப் ராவத், தீனா, மரியம் ஜார்ஜ், ‘லொள்ளு சபா’ மாறன், கவி ஜெ சுந்தரம், ஹரிஷ், யுவராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
சந்தானம் முற்றிலும் வேறுபட்டு நடித்துள்ள இந்த ‘குலு குலு’ ரசிகர்களுக்கு பிடிக்குமா?
அமேசான் காட்டில் உள்ள ஒரு பழங்குடி இனத்தில் பிறந்தவர் சந்தானம்.. காலப்போக்கில் அவரது இனமும், மொழியும் அழிந்து போகிறது. நிரந்தரமான இடமின்றி நாடோடியாக வலம் வருகிறார். அவரிடம் யார் என்ன உதவி கேட்டாலும் செய்யத் தயங்காதவர்.
ஒரு நாள் இலங்கையைச் சேர்ந்த கும்பல், ஒரு இளைஞரை கடத்துகிறது. அவரை மீட்டுத் தருமாறு அவரது நண்பர்கள் சந்தானத்திடம் கேட்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் சந்தானம் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து அவர் மீண்டாரா, இல்லையா? என்பது தான் குலு குலு படத்தின் கதை.
இதுவரை சந்தானம் நடித்திராத கூகுள் என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தானம் என்றவுடன் ரசிகர்கள் மனதில் வருவது அவரது நக்கலும், நகைச்சுவையும் தான்.. ஆனால் இந்தப்படத்தில் அது இல்லை. மாறாக ஒரு குணsசித்திர நடிகராக மனம் கவருகிறார். மொழியையும், நாட்டையும் பற்றி அவர் பேசும் காட்சிகளில் கைதட்டல்கள். அது இளைஞர்களுக்கு விழிப்புணர்வு செய்தி! இப்படி படம் முழுவதும் நடப்பு அரசியல் பேசி ஆங்காங்கே பல விஷயங்களை எடுத்துச் சொல்கிறார்.
அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, மகாநதி சங்கர், பிரதீப் ராவத், தீனா, மரியம் ஜார்ஜ், ‘லொள்ளு சபா’ மாறன், கவி ஜெ சுந்தரம், ஹரிஷ் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் செய்திருக்கிறார்கள். அதில் மரியம் ஜார்ஜின் கும்பல் தனிக்கவனம் பெறுகிறது. ‘லொள்ளு சபா’ மாறன், ஒரு கட்சியில் தான் வருகிறார். அப்படி வந்தாலும் தனது டிரேட் மார்க் காமெடியை செய்து சிரிக்க வைக்கிறார்.
படத்தின் முதல் பாதியில் சுவாரஸ்யம் சற்று குறைந்தாலும், இரண்டாம் பாதியில் சுவாரஸ்யம் க்ளைமாக்ஸ் வரை செல்கிறது.
சந்தோஷ் நாராயணனின் இசையும், விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
சந்தானம் இந்தப்படத்தில் எடுத்த வித்தயாசமான முயற்சி, அவரது ரசிகர்களுக்கு வித்தியாசமாக இருக்கும். ஆனால் அதில் பல ரசிகர்கள் பழைய கலகலப்பான சந்தானத்தையே அதிகம் விரும்புவார்கள்!