‘ஹரா’ படத்தில் அறிமுகமாகும் சந்தோஷ் பிரபாகர்.

‘வெள்ளி விழா’ நாயகன் மோகன் நடிக்கும் செகண்ட் இன்னிங்க்ஸ் படமான ‘ஹரா’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துப் பலரது வாழ்த்தையும் பெற்றிருக்கிறார் சந்தோஷ் பிரபாகர். மேலும் இந்த ‘ஹரா’ படத்தில், மைம் கோபி, சுரேஷ் மேனன், அனுமோல், மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார், அனித்ரா, கவுஷிக் என ஏராளமான  நட்சத்திரங்களுடன் தானும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த சந்தோஷத்தில் இருக்கிறார், அறிமுக நடிகரான சந்தோஷ் பிரபாகர். இவர் பிரபல பத்திரிகையாளரும், சினிமா விமர்சகருமான கோடங்கி ஆபிரகாமின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பத்திரிகையாளரின் மகன் என்பதாலேயே எளிதாக நடிகர் சந்தோஷூக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.  என்றும், அவரும் மற்றவர்களைப் போலவே வாய்ப்புகளைத் தேடி பிடித்திருக்கிறார்.

மேலும் இது குறித்து இது குறித்து சந்தோஷ் பிரபாகர் பேசும்போது,

“என் அப்பா திரையுலகில் செய்தியாளராக இருந்தாலும் எனக்காக சிபாரிசு செய்வதை அவர் விரும்பவில்லை. நான் தனியாகவே எனக்குத் தெரிந்த வகையில் சினிமாவில் நுழைய பலவாறு முயற்சி செய்து கொண்டிருந்தேன். அப்படித்தான் ‘ஹரா’ படத்திற்கு ஆடிசன் நடப்பதாகக் கேள்விப்பட்டு, இயக்குநர் விஜய்ஸ்ரீஜியின் அலுவலகத்திற்குச் சென்று அந்த ஆடீஷனிலும் கலந்து கொண்டு தேர்வானேன்.

ஆனால், எனக்கு இந்த ‘ஹரா’ முதல் படமல்ல… நான் நடிக்கத் தேர்வானது இதே  இயக்குநர் விஜய்ஸ்ரீஜியின் ‘பப்ஜி’ என்ற படத்திற்காக. அதில் மிகச் சிறிய வேடம் எனக்குக் கிடைத்திருந்தது. அதில் எனது நடிப்பை பார்த்துப் பாராட்டிய இயக்குநர் விஜய்ஸ்ரீஜி, அதன் பின்னர்தான் இந்த ‘ஹரா’ வாய்ப்பினை எனக்குக் கொடுத்தார்.

அதிலும் தமிழ் சினிமாவின் வெள்ளி விழா நாயகனான மோகன் சாருடன் இணைந்து படம் முழுவதும் வரும் அளவுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. இந்த ‘ஹரா’ படத்தில் இயக்குநர் விஜய்ஸ்ரீஜி மிக அழகாக என்னை மோல்டு செய்து நடிக்க வைத்திருக்கிறார். இதற்குக் காரணமான இயக்குநர் விஜய்ஸ்ரீஜி அவர்களுக்கு என்னுடைய நன்றி.

நான், பெயரிடப்படாத இன்னொரு படத்தில் கதையின் நாயகனாகவும் நான் நடித்து வருகிறேன். அந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் பொள்ளாச்சியில் நடந்து முடிந்துள்ளது. அந்தப் படத்தை இயக்கி வருபவர் திரையுலகில் எல்லாருக்கும் அறிமுகமானவர்தான் என்றாலும் அவரின் அறிமுக படம் இது என்பதால் படத்தின் பெயரும், இயக்குநரின் பெயரும் இப்போதைக்கு வேண்டாம்.

அந்தப் படத்தில் பொன்வண்ணன் சார், மைம் கோபி சார், சத்யா அண்ணன் ஆகியோருடன் நான் நடித்துள்ளேன். வெண்பா  எனக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். இன்ஸ்டா பிரபலம் அஞ்சனா என் தங்கையாக நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் இன்னும் பல பிரபலங்கள் இணைய உள்ளனர். அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும், கேட்கும் ஒரு சம்பவம்தான் அந்தப் படத்தின் கதை.

தற்போது வெளியாகியிருக்கும் ‘ஹரா’ படத்தில் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் என்னையும், தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரு நடிகனாக நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். என்னுடைய பயணம் வெற்றிகரமாகத் துவங்கியிருக்கிறது. இந்த ஓட்டம் எனக்கென்று தமிழ்த் திரையுலகத்தில் ஒரு தனியிடத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்கிறார் தன்னம்பிக்கையுடன்..!

நமது ஊடகமும் இளைஞர் சந்தோஷ் பிரபாகர் வெற்றி பெற வாழ்த்துகிறது!