‘விஷ்வா டிரீம் வேர்ல்ட்’ தயாரிப்பில், செல்ல குட்டி இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம், சாரா. இதில் சாக்ஷி அகர்வால், செல்ல குட்டி, யோகி பாபு, தங்கதுரை, ரோபோ சங்கர், விஜய் விஷ்வா, அம்பிகா, மிரட்டல் செல்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சினிமா மீது உள்ள அதீத பற்றால், முன்பின் அனுபவமில்லாமல் ‘சாரா’ படத்தை இயக்கியிருப்பதுடன், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார், அறிமுக இயக்குநரும் நடிகருமான கார்த்தீஸ்வரன். எப்படி இருக்கிறது?
சாரா( சாக்ஷி அகர்வால்) வும், செல்லா( செல்ல குட்டி) வும் நெருக்கமான பள்ளித்தோழர்கள். பள்ளித்தேர்வு காரணமாக தற்கொலை செய்ய முயற்சித்த சாராவை காப்பாற்றி, அவருக்கு பதிலாக, செல்லா தேர்வெழுதி வெற்றி பெறச்செய்கிறார். இதனால், அப்பா இல்லாத செல்லாவும், அவருடைய அம்மாவான அம்பிகாவும், சொந்தக்காரர்களால் நிராகரிக்கப்படுகின்றனர்.
சில வருடங்களுக்குப்பிறகு, சாரா திறமையான கட்டிட பொறியாளராக இருக்கிறார். தன்னுடைய காதலன் மகேஷ் ( விஜய் விஷ்வா) உடன் திருமண ஏற்பாடும் நடந்து வருகிறது. இந்நிலையில், பள்ளித்தோழன் சாராவின் அம்மா (அம்பிகா) வை விபத்து ஒன்றில் காப்பாற்றுகிறார். அதன் மூலம் சாராவும், அம்பிகாவும் நண்பர்களாகிறார்கள்.
சாராவின் தலைமையில் மிகப்பெரிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கே தினக்கூலி பெறும் தொழிலாளியாக செல்லா வேலை செய்து வருகிறார். இருவரும் ஒரு நாள் சந்தித்துக் கொள்ளும் போது, தங்களது பழைய நட்பை புதுப்பித்து கொள்கிறார்கள். இந்த விஷயம் அம்பிகாவிற்கு தெரியவர, செல்லாவுக்கு, சாராவை திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்.ஐதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், படத்தின் கதை.
அம்மாதான் எல்லாமே அவரை மிஞ்சி எதுவுமில்லை. என்ற சைக்கோத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், செல்ல குட்டி. மிகை நடிப்புடன், வித்தியாசமான குரல் எழுப்பி வில்லத்தனத்தை காட்டும் காட்சி, பயங்கரம்! எந்த விதி முறைகளையும் பின்பற்றவில்லை. கொஞ்சம் பயிற்சி எடுத்து நடித்திருக்கலாம். ‘சாரா’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், சாக்ஷி அகர்வால். அவருடைய நடிப்பினை வெளிப்படுத்த போதிய காட்சிகள் இல்லை! செல்ல குட்டியின் அம்மாவாக அம்பிகா, சாக்ஷி அகர்வாலின் அப்பாவாக பொன்வண்ணன் இருவரும் நிறைவான நடிப்பினை கொடுத்துள்ளனர். விஜய் விஷ்வா சில காட்சிகளில் நடித்திருந்தாலும் தனது இருப்பினை பதிவு செய்கிறார். யோகிபாபு, ரோபோ சங்கர், மிரட்டல் செல்வா ஆகியோர் ஓகேவான நடிப்பினை கொடுத்துள்ளனர்.
இயக்குநர் செல்லக்குட்டி வித்தியாசமான கதையை யோசித்திருக்கிறார். ஆனால் அதற்கான திரைக்கதையை யோசிக்கத்தவறி விட்டார். ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ஓகே!
சாரா – பலவீனமான படைப்பு!