சர்தார்  –  விமர்சனம்!

பி.எஸ் .மித்ரன் எழுதி இயக்கியிருக்கும் படம் சர்தார். கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷிக் கண்ணா, ரஜிஷா விஜயன்  நடித்திருக்க, இவர்களுடன் லைலா, முனீஸ் காந்த் மற்றும் குழந்தை நட்சத்திரம்  ரித்விக் உட்பட பலர் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில்,  தீபாவளி வெளியீடாக வந்திருக்கும் ‘சர்தார்’ எப்படி இருக்கிறது?

பாகிஸ்தான் நாட்டு ராணுவத்துக்குள் ஊடுருவி, ஒரு குறிப்பிட்ட ரகசியத்தை தெரிந்து கொள்ள, இந்திய ராணுவத்தால் அனுப்பபடுகிறார், ‘ரகசிய உளவாளி’ கார்த்தி. அந்த ரகசியத்தை தெரிந்து கொண்ட பிறகு அவரை அனுப்பிய உயர் அதிகாரி அவரை தேசதுரோகியாக சித்தரிக்கிறார். மேலும் அவரது குடும்பத்தினரையும் கொன்றுவிடுகிறார். அதில் ஒரு சிறுவன் மட்டும் தப்பித்துவிடுகிறான். தப்பித்த சிறுவன் தேசதுரோகியின் மகன் என்ற முத்திரையுடன் வளர்ந்து இன்ஸ்பெக்டராகவும் ஆகிவிடுகிறார்.

இந்நிலையில் பங்களாதேஷ் சிறையில் அடைபட்டிருக்கும் இந்தியாவின் ‘ரகசிய உளவாளி’ கார்த்திக்கு ஒரு கடிதம் மூலம் சமிக்ஞை கிடைக்கிறது. அவர் அந்த ஜெயிலில் இருந்து இந்தியா வருகிறார். அவரை கைது செய்ய ஒரு கூட்டமும், கொல்ல ஒருகூட்டமும் திட்டமிடுகிறது. அவர் ஏன் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டார்? அவர் தப்பிக்க யார் தூண்டினர். என்பது தான் ‘சர்தார்’ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

இன்ஸ்பெக்டர் கார்த்தி சில இடங்களில் கை தட்டல்களை பெற்றால், உளவாளி கார்த்தி பல இடங்களில் கை தட்டல்களை பெறுகிறார். நடிப்பினில் இரு வேறு காதாபாத்திரத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்திருக்கும் கார்த்தி, ரசிகர்கள் மனதினில் நிறைகிறார். மித்ரனின் ஸ்க்ரிப்ட்டை விட, கார்த்தியின் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்தின் பலமாக அமைந்திருக்கிறது.

கதைக்களத்தில், ஒரு பக்கா கமர்ஷியல் படத்திற்கான அத்தனை அம்சங்களும் உள்ள நிலையில், இயக்குனர்  அதை சரியாக பயண்படுத்தாமல் விட்டிருக்கிறார். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் உளவாளி கார்த்தி, பாகிஸ்தான் நாட்டின் ராணுவ முகாமுக்குள், நுழையும் காட்சியை சொல்லலாம். அத்தனை சுலபமாக நுழைவது சாத்தியமா! சிறு பிள்ளைத்தனமான காட்சியமைப்பு! அந்த ஒரு காட்சியில் சில கெட்டப்புகளையும் மாற்றி தப்புவது கேலி!

ஜி.வி .பிரகாஷின் இசையில்  சில பாடல்கள்  கேட்கும் படி இருக்கிறது. அவரின் பின்னணி  இசை படத்தில் பேசும் வசனங்களை சில இடங்களில் கேட்கவிடாமல் செய்கிறது.

சிறுவன் ரித்விக், இரண்டு கார்த்தியிடமும் பேசும் காட்சிகள் அனைத்தும் சிறுவர்களுக்கு பிடித்தமான காட்சிகள்.

முனீஸ்காந்த் காட்சிகள் அனைத்துமே ரசிக்கும் படியான காட்சிகள். சில இடங்களில் அவர் பேசும் வசனங்கள் கைதட்டல்களை பெறுகின்றன.

ராஷிக்கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா ஆகியோர் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. அவர்களின் நடிப்புக்கேற்ற காட்சிகள் எதுவும் அமையவில்லை!

ஒரு விஷயத்துக்காக இயக்குனர் மித்ரன் ஜவஹரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அது என்னவென்றால், பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீரால் ஏற்படும் கோடூரத்தையும், அதன் பின்னால் இருக்கும் மிகப்பெரிய மறைமுகமான வணிகத்தினையும் வெளிக்காட்டியிருக்கிறார். ‘ஒன் இன்டியா ஒன் பைப்லைன்’  இந்த திட்டத்தை இப்போது கேட்டாலும் நடுக்கம் ஏற்படுகிறது. இதை தெரிந்து கொள்ள அனைவரும் கண்டிப்பாக இந்தப்படத்தினை பார்க்கவேண்டும்!

மூன்றாம் உலகப்போர் நடந்தால் அது தண்ணீருக்கான போராக இருக்கலாம் என்ற கூற்று! உண்மையே!

இயக்குனர் மித்ரன் ஜவஹர், கதையை சிறுவர்கள் ரசிக்கும் படி எடுத்து செல்வதா? பெரியவர்கள் ரசிக்கும் படி எடுத்து செல்வதா? என்ற குழப்பத்தில் திரைக்கதை அமைத்து இருக்கிறார். இதில் தெளிவாக இருந்து இருந்தால், சர்தார் ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமாக அமைந்திருக்கும்.!