மின்சாரக்கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் ‘சர்வம் தாள மயம்.’ ஜி.வி.பிரகாஷ், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு இசயமைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.
மிருதங்கம் தயாரிப்பதை தொழிலாக செய்து வருபவர் குமரவேல். அவருடைய மகன் ஜி.வி.பிரகாஷ், விஜய்யின் தீவிர ரசிகன். மிருதங்க இசை உலகின் ஜாம்பவனாக திகழ்ந்து வருபவர் நெடுமுடி வேணு. அவருடைய மிருதங்க இசையால் ஈர்க்கப்படும் ஜி.வி.பிரகாஷ் சிஷ்யனாக சேர்த்துக்கொள்ள அவரிடம் கேட்கிறார். முதலில் மறுப்பு தெரிவிக்கும் அவர் பின்னர் சேர்த்துகொள்கிறார். இதனால் நெடுமுடி வேணுவிடம் முதலிடத்தில் இருக்கும் சிஷ்யன் வினீத் – ஜி.வி.பிரகாஷ் இடையே மோதல் ஏற்பட்டு ஜி.வி.பிரகாஷ் வெளியேற்றப்படுகிறார். அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களே. சர்வம் தாளமயம்!
இயக்குனர் ராஜீவ் மேனனின் துணிச்சலான பாத்திரப்படைப்பு பாராட்டப்படவேண்டிய ஒன்று. குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமே இசை சொந்தமானது இல்லை என சொன்ன விதம் அருமை நேர்மையான பதிவு. ‘வேம்பு ஐயர்’ நெடுமுடி வேணு, ‘தலித் கிருஸ்துவ இளைஞன்’ ஜி.வி.பிரகாஷ் இவர்களுக்கிடையே நடக்கும் உணர்ச்சி பூர்வமான வசனங்கள் ரசிக்க வைக்கிறது.
பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் தொலைத்த தொலைக்காட்சிகளின் ‘ரியாலிட்டி ஷோவின்’ தில்லு முல்லுவை தோலுரித்திருப்பது ரசனை. அதையும் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்ய தர்ஷினியை வைத்தே ‘செஞ்சது’ கூடுதல் சிறப்பு! ஜி.வி.பிரகாஷ் பலவிதமான வத்தியங்களை கற்றுக்கொண்டு நுழைவது சற்றே நெருடல். கதாபாத்திரங்களுக்கேற்ற கலைஞர்களின் தேர்வு, ஒளிப்பதிவு, இசை ஆகியன படத்தின் சிறப்பான அம்சங்கள்.
விதயா கர்வத்திற்கேற்ற கனகச்சிதமான பாத்திரம் நெடுமுடி வேணுவுக்கு சூப்பராக நடித்திருக்கிறார் வழக்கம்போல். ஜி.வி.பிரகாஷ் இந்தப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். குமரவேல், ஆதிரா என அனைவரும் சிறப்பாக தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர்.
அனைவரும் பார்க்க வேண்டிய படம் சர்வம் தாளமயம்!