சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின்  ப்ரீ ரிலிஸ் ஈவண்ட் !

சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின்  ப்ரீ ரிலிஸ் ஈவண்ட், படக்குழுவினருடன்,  திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள,  பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

வெகு கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவினில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள், படம் பார்த்த மகிழ்ச்சியில்  படம் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

வரும் மே மாதம் 1 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன், இயக்குநர் அபிஷன் ஜீவிந், நாயகன் சசிகுமார், நடிகர் மிதுன் ஜெய் சங்கர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்….

நடிகர் சசிகுமார் கூறியதாவது…

இவ்வளவு தரமான படத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அவர்களுக்கு நன்றி. நான் கம்பெனி புரொடக்‌ஷன்ஸைத் தொடங்கியபோது, புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினேன். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி சார் தான் எனக்கு அதற்கு உத்வேகமாக இருந்தார், அவர்களின் 90 படங்களில், 48 படங்கள் அறிமுக இயக்குநர்கள் தான். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தொடர்ந்து புதிய இயக்குநர்களை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தும் என்று நம்புகிறேன், மேலும் அவர்களின் சிறந்த சிந்தனைக்காக மட்டுமே அவர்களின் பேனர் படங்களைப் பார்க்குமாறு பார்வையாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன். * இன்றுவரை தங்கள் உரிமைகள் மற்றும் அடையாளங்களுக்காகப் போராடும் அகதிகள் மீது பெரும் அக்கறையும் அன்பும் உள்ளது.   அயோத்தி மற்றும் நந்தனைப் போலவே, டூரிஸ்ட் ஃபேமிலி அகதிகளின் வலியை அழுத்தமாகச் சொல்லும், மிகவும் தகுதியான பாதையை அமைக்கும் படமாக இருக்கும் என்று  என்று நம்புகிறேன்.என்றார்.