‘ஈபி எப் பிக்சர்ஸ்’ சார்பில், எட்வர்ட் ராஜன் தயாரித்து, மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், ‘சாத்தான் தி டார்க்’. இதில் ஃப்ரெட்ரிக் ஜான், ஐரா, சாந்தினி தமிழரசன், மோனா பெட்ரே, ஸ்ரீஜா ரவி நடித்துள்ளனர்.
கடவுளை நம்பி ஏமாந்த ஒரு பெண் சாத்தானை வழிபாடு செய்கிறார். அதனால், அவரது ஊருக்கும் குடும்பத்திற்கும் என்னென்ன நிகழ்ந்தது. என்பதை ரத்தம் தெறிக்கும் காட்சிகள் மூலம் திகிலூட்ட முயற்சித்திருக்கும் திரைப்படமே ‘சாத்தான் தி டார்க்’.
அநேக தொலைக்காட்சித் தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்த ‘மோனா பெட்ரே’ தான், முதன்மையான கதாபாத்திரம் மிரட்டியிருக்கிறார். அவரைப்பார்க்கும்போதே பயம் தொற்றிக்கொள்கிறது. தனக்குத்தானே பல்லைப் பிடுங்கிக்கொள்வது, விரல்களை வெட்டிக்கொள்வது, நாக்கை அறுப்பது என படம் முழுவதும் பயமுறுத்துகிறார். மகள்களுடன் கனிவாக பேசும்போதே விகாராமான மனநிலையை பிரதிபலிக்கும் காட்சிகள் அவரது நடிப்புத்திறனை நன்கு வெளிப்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவியாக ஐரா. அம்மாவின் மனநிலை அறிந்து, காதலை மறுப்பதும், அம்மாவை வெறுக்க மனமில்லாத நிலையில், வாய் பேசமுடியாத தங்கையை காப்பாற்றும் காட்சிகளில், பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது தனக்குள்ளே ஏற்படும் மாற்றத்தை உணரும் காட்சிகளிலும், ஆசிரியையிடம் கெஞ்சும் காட்சிகளிலும் நன்றாகவே நடிப்பினை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.
பள்ளி மாணவராக ஃப்ரெட்ரிக் ஜான் ஐராவைக் காப்பாற்ற சென்ற இடத்தில் மாட்டிக்கொள்ளும் காட்சிகளில் நிறைவான நடிப்பினை வெளிப்படுத்தியிருகிறார்.
சாந்தினி தமிழரசனுக்கு ஒரு சில காட்சிகள் தான், இரண்டாம் பாகத்தில் இவரே முதனமை பாத்திரமாக இருப்பது போல் தோன்றுகிறது. இவராலேயே சாத்தானின் வழிப்பாட்டில் மாறுதல் ஏற்படுத்துகிறது. இவரது கதாபாத்திரம் இரண்டாம் பகுதியை பார்க்கத் தோன்றுகிறது.
ஒளிப்பதிவாளர் பாலா ஜி. ராமசாமி. படத்தின் பெரும்பலமாக இருக்கிறார். அஷ்வின் கிருஷ்ணாவின் இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
எழுதி, இயக்கியிருக்கும் மணிகண்டன் ராமலிங்கம், தெளிவான திரைக்கதையின் மூலம் காட்சிகள் அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!
‘சாத்தான் தி டார்க்’ – ஓகே தான்!