ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்: கதையின் நாயகனாக சதீஷ், நாயகியாக பவித்ரா லட்சுமி அறிமுகம்
ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’, விஜய் சேதுபதி நடித்த ‘கவன்’, தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பிகில்’ உள்ளிட்ட பல தரமான திரைப்படங்களை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து முத்திரை பதித்து வரும் கல்பாதி எஸ் அகோரம், கல்பாதி எஸ் கணேஷ் மற்றும் கல்பாதி எஸ் சுரேஷ், வித்தியாசமான மற்றும் புதுமையான கதை அம்சத்துடன் கூடிய புதிய படமொன்றை தயாரிக்கின்றனர்.
பல வெற்றிப்படங்களில் நடித்து வரும் சதீஷ், இப்படத்தின் மூலமாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனம் கவர்ந்த பவித்ரா லட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பல குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களை இயக்கி விருதுகளை வென்றுள்ளவரும், யார்க்கர் ஃபிலிம்ஸ் எனும் யூடியூப் சேனலை நடத்தி வருபவருமான கிஷோர் ராஜ்குமார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் 21-வது படைப்பான இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அர்ச்சனா கல்பாதி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆவார்,
திரைப்படத்தை பற்றி கூறும் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார், “மிகவும் வித்தியாசமான இந்த படத்தின் கதை நகைச்சுவை ததும்ப விவரிக்கப்பட உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெரிய திரையில் கண்டு மகிழும் வகையிலான ஃபேண்டசி காமெடியாக இத்திரைப்படம் திகழும்,” என்கிறார்.