‘சட்டக்கதிர்’ இதழ் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி சென்னையில் சட்டக்கதிர் சட்ட மாத இதழின் வெள்ளி விழாவும், சட்டம் மற்றும் நீதிக் கருத்தரங்கும், நீதித்துறையிலும் சட்டத்துறையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ‘சட்டக்கதிர்’ இதழுடன் இணைந்து லிப்ரா ஹவுஸ் ஆப் ஆர்ட்ஸ் நடத்தியது.
தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக ஆளுநர் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்கள் ‘சட்டக்கதிர்’ ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டியதுடன், இந்திய மாநில உயர்நீதி மன்றங்களில் அந்தந்த மாநில ஆட்சிமொழிகள் கூடுதல் வழக்கு மொழியாக வருவதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
Related Posts
தொடக்க விழாவிற்கு தலைமையேற்ற மாண்புமிகு நீதியரசர் ஆர். மகாதேவன் அவர்கள் சட்டக்கதிரின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார். மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்களுக்கு நீதித் தமிழ் அறிஞர் விருதினை ஆளுநர் வழங்கினார்.
முழுநாள் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மாநில மொழிகள் உயர் நீதிமன்றங்களில் பயன்படுத்துதல், நீதித்துறை நிர்வாகமும் தீர்ப்புகளை வழங்குதலும், இந்திய அரசமைப்பில் இசைவு பட்டியலும் மத்திய மாநில அரசு உறவுகளும் என்ற தலைப்பில் சட்ட வல்லுநர்கள் வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.
நிறைவு விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் விமலா அவர்கள் தமிழ் மொழி சட்ட மொழியாக்க வேண்டியதின் தேவையை வலியுறுத்தினார்.
சட்டத்தமிழ் மாமணி , சட்டத்தமிழ் மணி விருதுகளை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்கள் சட்டக்கதிர் இதழின் சேவையை பாராட்டினார். “தமிழ் பெரும் பாரம்பரிய மிக்க மொழி. கலாச்சார ரீதியாக தமிழ் சிறப்பான மொழி. எனக்கு கொஞ்சம் கொஞ்சமாய் தமிழ் தெரியும். நான் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் நிச்சயமாக தமிழ் மொழியை அதிகம் கற்பேன். தமிழ் இலக்கியங்களை படிப்பேன். நான் பிறந்த வீடு ஓரிடமாக இருந்தாலும் தமிழ்நாடு எனது இன்னொரு வீடு. ” என சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.
விழாவில் ஹவுஸ் ஆப் ஆர்ட்ஸ் நிறுவனர் ரவீந்தர் சந்திரசேகர் அவர்களும் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் சட்டக்கதிர் ஆசிரியர் டாக்டர் வி ஆர் எஸ் சம்பத் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் திரு. டேவிட், திரு. கே. துரைசாமி, திரு. ஆர் வி தனபாலன், திரு எம் முத்துவேலு, திரு கே பாலு ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.