‘சட்டம் என் கையில்’ – விமர்சனம்!

‘நாய் சேகர்’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான காமெடி நடிகர் சதீஷ், நடிப்பினில் வரும் 27 ஆம் தேதி வெளிவரவிருக்கும் ‘க்ரைம் த்ரில்லர்’ திரைப்படம், சட்டம் என் கையில். இப்படத்தில், சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவருடன் அஜய்ராஜ், பவல் நவகீதன், மைம் கோபி, ரித்திகா, Kpy சதீஷ், வித்யா பிரதீப், பவா செல்லதுரை, ராம் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பரத்வாஜ் முரளிகிருஷ்ணன், ஸ்ரீராம் சத்தியநாராயணன், கோகுல கிருஷ்ணன் ஷண்முகம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, ‘சிக்ஸர்’ திரைப்படத்தை இயக்கிய சாச்சி இயக்கியிருக்கிறார். P.G.முத்தைய்யா ஒளிப்பதிவு செய்திருக்க, இசையமைத்திருக்கிறார், எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட்.

‘சட்டம் என் கையில்’ திரைப்படம் ஒரு இரவில் நடந்து முடிவது மாதிரியான கதை. சதீஷ் ஏற்காடு நோக்கி காரை ஓட்டிச்சென்று கொண்டிருக்கிறார். இடையில் சிலர் அவருக்கு போன் செய்கிறார்கள். பதட்டமடைவதால் காரை அதிவேகமாக ஓட்டிச்செல்கிறார். அப்போது பைக்கில் குறுக்கே வரும் ஒருவரின் மீது மோதிவிட, அவர் அங்கேயே செத்துவிடுகிறார். அவரது சடலத்தை எடுத்து கார் டிக்கியில் போட்டுவிட்டு, செல்லும் வழியில் ஏற்காடு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட (ASI) காவல் உதவி துணை ஆய்வாளர் பவல் நவகீதன் குடித்து விட்டு கார் ஓட்டியதாரவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து செல்கிறார். அப்போது ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக (SI) உதவி ஆய்வாளர் அஜய்ராஜூக்கு தகவல் வருகிறது. இதை, உடனே கண்டுபிடித்து முடிக்க ஏற்காடு சரக, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் DSP கட்டளையிடுகிறார். இதனால், இந்த கொலை வழக்கை சதீஷ் மீது போட்டு வழக்கை முடிக்க திட்டமிடுகிறார், (ASI) காவல் உதவி துணை ஆய்வாளர் பவல் நவகீதன். அதன் பிறகு என்ன நடந்தது, கொலை செய்யப்பட்ட இளம் பெண் யார், டிக்கியில் உள்ள சடலம் என்ன ஆனது? போன்ற பல கேள்விகளுக்கு கிடைக்கும் விடையே, சட்டம் என் கையில் படத்தின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

படம் ஆரம்பித்து சில காட்சிகள் சுவாரசியமில்லாமல் தான் சென்று கொண்டிருக்கும். அந்த பைக் ஆக்சிடென்ட் காட்சிக்கு பிறகே படம் சற்று சுவாரசியமாகிறது. அதன் பிறகு க்ளைமாக்ஸ் நெருங்கும்போது மேலும் சுவாரசியமாகிறது. இளம் பெண் கொலை, பைக் ஆக்சிடென்ட் என ஒவ்வொன்றாக மர்ம முடிச்சுகள் அவிழும்போது ஒரு டீசென்டான க்ரைம் த்ரில்லர் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. ஒரு சில காட்சிகள் யூகிக்க முடிந்தாலும் சுவாரசியமே. காட்சிகளை வேகமாக நகர்த்தியிருக்கலாம். தேவையற்ற கேமரா பேனிங் ஷாட்ஸ்களை தவிர்த்திருக்கலாம். அதேபோல் எடிட்டிங்கிலும், ஃபாஸ்ட் கட் எடிட் செய்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும்.

இயக்குநர் சாச்சி, போலீஸ் ஸ்டேஷனுக்குள் நடக்கும் விஷயங்களையும், ஒரு  SI க்கும் ASI நடக்கும் ஈகோ மோதல் காட்சிகளையும் அழகாக வடிவமைத்துள்ளார். ஒரு சில காட்சிகள் அமெச்சூர்த்தனமாக இருக்கிறது.

நடிகர்களை பொறுத்தவரை சதீஷ் வழக்கமான நடிப்பினை தவிர்த்து, வித்தியாசம் காட்டி, ரசிக்கும்படி நடித்திருக்கிறார். மற்றபடி அஜய்ராஜ், பவல் நவகீதன், மைம் கோபி, ரித்திகா, Kpy சதீஷ், வித்யா பிரதீப், பவா செல்லதுரை, ராம் தாஸ் ஆகியோர் குறை சொல்ல முடியாதபடி நடித்துள்ளனர்.

‘சட்டம் என் கையில்’ திரைப்படம், ஆஹா ஓஹோன்னு இல்லா விட்டாலும் ஒரு டீசென்ட்டான படம் பார்த்த திருப்தி இருக்கும்!

கிரைம் த்ரில்லர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு பிடிக்கும்!