‘சட்டமும் நீதியும்’ –  விமர்சனம்!

‘18 கிரியேட்டர்ஸ்’  நிறுவனம் சார்பில், சசிகலா பிரபாகரன் தயாரிப்பில் 7 அத்தியாயங்களாக உருவாக்கப்பட்டிருக்கும் தொடர், ‘சட்டமும் நீதியும்’. இதில் பருத்திவீரன் சரவணன் , நம்ரிதா , அருள் டி.சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொடரின் கதையை சூரிய பிரதாப் எழுதியுள்ளார். இயக்கியிருக்கிறார், பாலாஜி செல்வராஜ். ஒளிப்பதிவு எஸ்.கோகுல கிருஷ்ணன் , படத்தொகுப்பு ராவணன், இசை விபின் பாஸ்கர், கலை இயக்கம் பாவனா கோவர்தன், பாடல் வரிகள் ஸ்ரீனி செல்வராஜ்.

வெளியீடு ZEE5 ஒரிஜினல்.

‘பருத்தி வீரன்’ சரவணன் ஒரு நோட்டரி. கோர்ட் வாசலில் பத்திரங்களை டைப் செய்து வருகிறார். இவரிடம், சட்டப் படிப்பு படித்து முடித்த நம்ரிதா பயிற்சிக்கு சேர்கிறார். இரிவரும் சேர்ந்து, கோர்ட் வாசலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ஒருவருக்கு நீதி கேட்டு பொதுநல வழக்கு தொடருகிறார்கள். அதில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும். என முடிவு செய்கின்றனர். முதலாம் நாள் நடக்கும் வாதம், பிரதிவாதத்தில் இவர்கள் பக்கம் சாதகமாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து தீக்குளித்து இறந்தவரின் உறவுக்காரர்களை தேடிச் செல்கின்றனர். அப்போது, தீக்குளித்தவர் ‘மன நலம்’ பாதிக்கப்பட்டவர் எனும் விஷயம் தெரிய வருகிறது. சரவணனும், நம்ரிதாவும் அதிர்ச்சியடைகின்றனர். வழக்கு தள்ளுபடியாகும் சூழல். இதன் பிறகு நடந்த சுவாரசியமான சம்பவங்கள் தான் ‘சட்டமும் நீதியும்’.

முதலிரண்டு தொடர்கள் மெதுவாக தொடர்கிறது அதன் பிறகு, கதைக்குள்ளேயே பயணிக்கும் உணர்வு வந்து விடுகிறது. சட்டங்கள் குறித்து, மேம்போக்காக சொல்லாமல் கொஞ்சம் ஆழமாகவே சொல்லியிருக்கிறார்கள். இந்தபத் தொடர், சட்டப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நிச்சயமாக  சுவாரசியத்தினை கொடுக்கும்படியாக, கடைசித் தொடர்வரை திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது பாராட்டுதலுக்குரியது. அது போல் கிரைம் த்ரில்லர் பார்ப்பவர்களுக்கும் பிடிக்கும்.

வழக்கறிஞர் சுந்தர மூர்த்தியாக, கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பருத்திவீரன் சரவணன், சிறப்பான நடிப்பினை நடித்திருக்கிறார். இவரிடம் பயிற்சி பெறும் வழக்கறிஞராக நடித்திருக்கும் நம்ரிதாவும் குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்திருக்கிறார்.

அரசு தரப்பு வழக்கறிஞராக நடித்திருக்கும் அருள் டி சங்கர், தற்கொலை செய்து கொள்ளும் சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம் ஆகியோரும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.

எஸ்.கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, விபின் பாஸ்கரின் பின்னணி இசையும் தொடருக்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கிறது.

சட்டமும் நீதியும் தொடரின் வெற்றிக்கு பலம் சேர்த்திருப்பது சட்டப்பிரிவுகள் குறித்த வசனமும்,தாதற்கான காட்சிகளுமே. வழக்கமான சினிமாத்தனங்கள் அதிகமில்லாததும் பலம் தான்.

சில தொடர்களை பார்க்கும் போது தான், முழுத்திரைப்படமாக வந்திருந்தால் இன்னும் சுவாரசியம் கொடுத்திருக்குமே! என எண்ணத்தோணும். அந்த வகையில், இந்த ‘சட்டமும் நீதியும்’ தொடர்!

சட்டமும் நீதியும் – சுவாரசியமானத் தொடர்!