பொதுவாக பெரும்பாலன படங்களின் தலைப்பு ரசிகர்களை கவரும் வகையில் மட்டுமே இருக்கும். ஒரு சில படங்களின் தலைப்புகள் மட்டுமே கதைக்கும் அந்த கதைக்குள் வரும் கதாபாத்திரத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கும். அந்த வகையில் விஜய் சேதுபதி படத்தின் தலைப்பு ‘சீதக்காதி’ மிகச் சரியாக பொருந்துகிறது.
விஜய் சேதுபதியின் ‘25’ வது படமான ‘சீதக்காதி’ ரசிகர்களின் எதிர்பார்ப்பு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியிருக்கிறது. இந்தப்படத்தை பாலாஜி தரணிதரன் எழுதி, இயக்கியிருக்கிறார். ‘பாசன் ஸ்டுடியோ’ சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ் ஜி ஜெயராம் தயாரித்துள்ளனர். ‘ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் வெளியிட்டுள்ளார்.
அனைவரின் எதிர்பார்ப்பையும் இந்தப்படம் பூர்த்தி செய்துள்ளதா? பார்ப்போம்.
பால்ய பருவத்திலிருந்தே மேடை நாடகங்களில் நடித்துவரும் ஐயா ஆதிமூலம் (விஜய்சேதுபதி) க்கு நடிப்பு மேல் தீராத காதல். இவரது நாடகங்களுக்கு மக்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். நாடக உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் அவர், நாடக அரங்கிலேயே தன்னுடைய வாழ் நாளின் பெரும் பகுதியை கழிக்கிறார்.
கால மாற்றத்தின் காரணமாக சினிமாவின் ஆதிக்கத்தினால் நாடகத்திற்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது. இதனால் பொருளாதார ரீதியாக அவரது நாடக்குழு கடுமையாக பாதிக்கப்படுகிறது. இருப்பினும் நாடகத்தின் மீதுள்ள காதலால் ஒவ்வொரு நாடகத்தையும் கடும் சிரமத்துடன் நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் ஐயா ஆதிமூலத்தின் பேரனுக்கு மருத்துவச்செலவுக்காக பெருந்தொகை தேவைப்படுகிறது. இக்கட்டான நிலையில் இருக்கும் ஐயா ஆதிமூலம் என்ன செய்தார் என்பதே படத்தின் திரைக்கதை, க்ளைமாக்ஸ்.
படம் ஆரம்பித்தவுடனேயே விஜய்சேதுபதி தன்னுடைய அசாத்திய நடிப்பில் ரசிகர்களை கட்டிப்போடுகிறார். நாடகத்திற்கே உரித்தான தெளிவான வசன உச்சரிப்புடன் ஔரங்கசிப் நாடகத்தில் ஔரங்கசீப்பாக அவர் நடிக்கும் காட்சி சூப்பர். வயாதான வேடத்தில் மிரட்டியிருக்கிறார். ஆனால் பிராஸ்தடிக் மேக்கப் அவ்வளவாக சரியில்லை. படு செயற்கையாக இருக்கிறது.
விஜய்சேதுபதியின் மனைவியாக வரும் ‘ஊர்வசி’ அர்ச்சனா ஒரு சில காட்சிகளில் வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். மௌலியும் தன்னுடைய வழக்கமான நடிப்பால் ரசிகர்களை கவருகிறார்.
இந்தப்படத்தின் மூலம் நடிகர் வைபவின் அண்ணன் சுனில் அறிமுகமாகியுள்ளார். திரைக்கதை தொய்வு ஏற்பட்ட இடங்களில் இவரது காமெடி கைகொடுத்துள்ளது. ரம்யா நம்பீசன், காயத்ரி சங்கர், பார்வதி நாயர் ஆகியோர் நடிகர்களாகவே நடித்துள்ளனர்.
மற்றபடி படத்தில் குறிபிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை. பாலாஜி தரணிதரன் திரைக்கதையை இன்னும் சுவாரஷ்ய படுத்தியிருக்கலாம்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீதக்காதி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.