‘சீதா பயணம்’ – விமர்சனம்!

ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன் சுதீந்திரா, அர்ஜுன் சர்ஜா, துருவா சர்ஜா, பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கோவை சரளா, பித்திரி சதி, ஜெயராம், ஸ்ரீ ஹனுமந்த் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், சீதா பயணம். இத்திரைப்படத்தினை ‘ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ சார்பில், அர்ஜுன் சர்ஜா தயாரித்து இயக்கியிருக்கிறார்.

ஒரு நொடி நிகழ்வில் நடக்கும் சம்பவங்கள் பலரது வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிடும். அப்படியான ஒரு சம்பவத்தை மைய்யமாக கொண்டு, ஒரு காதல் கதையை சொல்லியிருக்கிறார், இயக்குநர் அர்ஜூன் சர்ஜா.

சத்யராஜின் ஒரே மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். மதுரையில் நடக்கும் ஒரு விழாவிற்காக காரில் தனியாக செல்கிறார். செல்லும் வழியில், லிஃப்ட் கேட்டு ஏறிக்கொள்கிறார், நிரஞ்சன் சுதீந்திரா. இருவருக்குள் நட்பு ஏற்படுகிறது.  செல்லும் வழியில் சில தடங்கல்களும் ஏற்படுகிறது. அவைகளை மீறி நிரஞ்சனை டிராப் செய்துவிட்டு, அவர் செல்ல வேண்டிய இடத்தை அடையும் போது ஒரு பெரிய விபத்தை சந்திக்க நேர்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது?

நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுனின், டீசன்ட்டான தோற்றமும், நடிப்பும் ரசிகர்கள் அனைவரையும் எளிதில் ஈர்த்து விடுகிறது. சத்யராஜிடம் பாசம் காட்டுவதிலும், நிரஞ்சனிடமும் அவரது குடும்பத்தினருடனும் பழகும் காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, காரில் லிஃப்ட் கேட்டு பயணம் செய்யும் நிரஞ்சனை சந்தேகத்தோடு பார்க்கும் காட்சிகள் சிறப்பு.

சத்யராஜ், பிரகாஷ்ராஜ் இருவரும் தங்களது அனுபவமான நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர். அர்ஜூன் சர்ஜா படம் என்றால் சண்டைக்காட்சிகள் இல்லாமல் இருக்குமா? இருக்கிறது. துருவ் ஷார்ஜாவும், அர்ஜூனும்  சண்டையிடும் கட்சி, அவரது ரசிகர்களை திருப்தி படுத்துகிறது. கோவை சரளா, பித்திரி சதி, ஜெயராம், ஸ்ரீ ஹனுமந்த் உள்ளிட்டோரும் தங்களது நடிப்பின் மூலம் திரைக்கதையை சுவாரசியமாக நகர்த்தி செல்வதற்கு உதவியிருக்கிறார்கள்.

ஜி.பாலமுருகனின் ஒளிப்பதிவும், அனுப் ரூபன்ஸ் இசையும் படத்தின் பலமாக இருக்கிறது. இரண்டாம் பாதியைப்போல் முதல் பாதியும் இருந்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்.

மொத்தத்தில், குடும்ப உறவுகளுக்கிடையே நிகழும் சம்பவங்கள். அப்பா, மகள் செண்டிமெண்ட் காட்சிகள், சக மனிதர்களிடையே நிகழும் பாசமும் நேசமும் என, குடும்பமாக ரசிக்கும் வண்ணம் இருக்கிறது. இந்த சீதாவின் பயணம்.