ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள சாணிக்காயிதம் திரைப்படத்தினை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதில் செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘சாணிக்காயிதம்’ தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் மே மாதம் 6 ஆம் தேதி வெளியாகிறது.
‘சாணிக்காயிதம்’ படம் குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறுகையில்…
‘சாணிக்காயிதம்’ மனதை உலுக்கும் ஒரு அழுத்தமான படைப்பு; மனதைக்கொள்ளை கொள்ளும் வகையிலான கதை சொல்லும் பாங்கு மற்றும் அற்புதமான நடிப்பு ஆகியவற்றை கொண்டுள்ள இந்தத் திரைப்படம் அதிரடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களை இறுதிவரை கட்டிப்போடும்”.
வழக்கமான கதைகளை வழக்கத்திற்கு மாறாக ரத்தமும் சதையுமாக மயிர்க்கூச்செறியும் வகையில் மாறுபட்ட வடிவங்களில் சொல்வதில் நான் மிகவும் உற்சாகம் அடைகிறேன். பழிக்குப் பழி வாங்கத்துடிக்கும் கருப்பொருளோடு பின்னிப்பிணைந்த ஒரு பரபரப்பான அதிரடியான கதைக்களம் இப்படத்தில் அமைந்துள்ளது. பழிவாங்கும் குறிக்கோளோடு பயணப்படும் ஒரு பெண்ணின் கதை இது.”
ஒவ்வொரு வகையான கதைக்கும் ஒவ்வொரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, அமேசான் ப்ரைம் வீடியோவின் பெரும் விநியோகத்தின் துணையோடு இணைந்து உலகெங்கிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு சாணிக்காயிதத்தை கொண்டு செல்வதில் நான் பரவசமடைந்திருக்கிறேன்”. என்றார்.