விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர். இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா. அதற்கு பிறகு இந்த பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது.
யூடியூப்பில் இன்று வரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள். உலகம் முழுதும் பிரபலமான இந்த குழு “ கரிமுகன் “ என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்கள்.. செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.காயத்ரி என்ற கேரளா பெண் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஏ விமல் புரொடக்சன்ஸ் சார்பாக T.சித்திரைச்செல்வி , M.செல்வமணி, செந்தூர் பிக்சர்ஸ் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்குகிறார் செல்ல தங்கையா.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…
நானும் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி மற்றும் எங்கள் குழுவினர் நாட்டுப்புற பாடல்கள் பாடி நிகழ்ச்சி நடத்தி வருகிறோம்..எங்கள் குழுவைப்பற்றி எல்லோருக்குமே தெரியும்.
ஏற்கெனவே செந்தில் கணேஷை நாயகனாக்கி திருடு போகாத மனசு என்ற படத்தை இயக்கி வெளியிட்டேன். அதற்கு பிறகு மீண்டும் அவரை வைத்து கரிமுகன் படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது அவர் விஜய் டிவியில் பாடி புகழ் பெற்று விட்டார்.
இது எங்கள் குழுவினருக்கு மகிழ்ச்சி. திருடு போகாத மனசு படத்தில் கணேஷ் என்ற கதாபாத்திரம் ஏற்றிருந்தார். இந்த படத்தில் செந்தில் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தின் கதை பற்றி சொல்ல வேண்டுமானால்
முகம் தெரியாத இரண்டு பேருக்குள் நடக்கிற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து முகம் தெரிந்த இரண்டு பேருக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதும் அதிலிருந்து அவர்கள் வெளியே வந்தார்கள் என்பதை கமர்ஷியல் காமெடியாக சொல்லி இருக்கிறோம்.
செந்தில் கணேஷ் எலக்ட்ரீஷியனாக நடிக்கிறார் …படத்தில் இடம் பெறும் நான்கு பாடல்களில் இரண்டு பாடல்களையும் பாடி இருக்கிறார்.
படப்பிடிப்பு புதுக்கோட்டை, கோட்டை பட்டினம், தேவிபட்டினம் போன்ற இடங்களில் நடை பெற்றுள்ளது. கரிமுகன் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் செல்ல தங்கையா.