‘சக்தித் திருமகன்’! – விமர்சனம்!

‘விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் படம், சக்தித் திருமகன். விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்க, அவருடன் ‘காதல் ஓவியம்’ படத்தின் கதாநாயகன் ‘சுனில் கிருபளானி’  (கண்ணன்) வில்லனாக நடித்திருக்க, வாகை. சந்திரசேகர், செல்முருகன், திருப்தி ரவீந்திரா, கிரிஷ் ஹாசன், ஷோபா விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார் அருண் பிரபு.

ஒளிப்பதிவு, ஷெல்லி ஆர் காலிஸ்ட். இசை, விஜய் ஆண்டனி.

இந்திய அரசியலில், ஆளும் அதிகார மையத்திற்கு ஆலோசனை வழங்கும் ஆளுமை மிக்க தொழிலதிபர், பெரும் பிரச்சனைகளுக்கு நடுவே சாதுர்யமாக காய்களை நகர்த்துபவர்  சுனில் கிருபளானி. இவரிடம் எடுபிடியாக இருப்பவர் விஜய் ஆண்டனி. இதனால், ஸ்டேட் முதல் சென்ட்ரல் வரை உள்ள அனைத்து ஆளும் அதிகார மையங்களுக்குள் முகம் தெரியாமல் நடுவிலே ஊடுருவி நிற்பவர், விஜய் ஆண்டனி.  கான்ஸ்டபிள் ட்ரான்ஸ்ஃபரிலிருந்து கமிஷனர் ட்ரான்ஸ்ஃபர் வரை கமிஷனுக்காக, சுனில் கிருபளானிக்கு தெரியாமலேயே செய்து கொடுத்து வருகிறார், இவரால் முடியாதது எதுவுமே இல்லை என்ற அளவிற்கு கச்சிதமாக வேலைகளை செய்து கொடுத்து வருகிறார். இவர் செய்த ஒரு வேலை, சுனில் கிருபளானியை அதிர்ச்சிக்குள்ளாக்குவதோடு இந்திய அரசியலில் பெரும் புயலைக்கிளப்புகிறது. அது என்ன? என்பதை சுவாரஸ்யமான , பரபரப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார், இயக்குநர் அருண் பிரபு.

அரசியலையும், அரசைப் பற்றியும் பல படங்கள் இதற்கு முன்னர் வந்திருந்தாலும், சக்தித் திருமகன் அவற்றிலிருந்து தனித்துவமாக இருக்கிறது. சமகாலப் பிரச்சைனைகளை பேசிய அதே வேளையில், ஒரு நாட்டின் அரசாங்கம் எப்படி இயக்கப்படுகிறது. என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு, வீரியமான வசனங்கள் மூலம் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. படத்தில் இடம்பெறும் பல கதாபாத்திரங்கள், தற்போது இருக்கும் பல அரசியல் பிரமுகர்கர்களுடன் ஒத்துப்போகிறது. நடப்பு அரசியல் தெரிந்தவர்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடித்துப்போகும்.

படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை, ஒவ்வொரு காட்சிகளுமே சுவாரஸ்யம் குறையாமல் படமாக்கப்பட்டிருப்பது படத்தின் பலமாக இருக்கிறது.  நம்மைச்சுற்றி இவ்வளவு விஷயங்கள் நடந்து வருகிறதா? என மலைக்க வைக்கும் விஷயங்கள் படத்தில் ஏராளமாக சொல்லப்பட்டிருக்கிறது. க்ளைமாக்ஸில், சமகால விலைவாசி குறித்து விஜய் ஆண்டனி பேசும் வசனங்கள், அடித்தட்டு மக்களின் குமுறலை உரக்கச்சொல்கிறது. ஒரு சில காட்சிகளைத்தவிர அனைத்து காட்சிகளுமே எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் படமாக்கபட்டுள்ளது சிறப்பு. இயக்குநர் அருண் பிரபுவின் உழைப்பு நன்கு தெரிகிறது.

விஜய் ஆண்டனி, அவர் ஏற்று நடித்திருக்கும் ‘கிட்டு’ கதாபாத்திரத்தினை உணர்ந்து, குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்திருக்கிறார். அலட்டலில்லாமல் அவர் போடும் சதித்திட்டங்கள் பிரமிக்க வைக்கிறது. அந்த கதாபாத்திரம் அவருக்கே உருவாக்கப்பட்டுள்ளது போல் இருக்கிறது. அவருடைய திரைத்துறை வாழ்க்கையில் 25 படமான இந்த சக்தித்திருமகன் திரைப்படம், முக்கியமான ஒரு திரைப்படமாக அமையும்.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருக்கும் திருப்தி ரவீந்திராவின் கதாபாத்திரம் எந்தவிதமான தாக்கத்தினையும் ஏற்படுத்தவில்லை. அவரது காட்சிகளை எடிட் செய்துவிட்டால் கூட படத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

’காதல் ஓவியம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறியப்பட்ட ‘சுனில் கிருபளானி’ (கண்ணன்) அரசியல் ஆலோசகராக, குள்ள நரித்தனம் கொண்டவராக நடித்திருக்கிறார். இவர் அந்தக் கதாபாத்திரத்திற்கேற்றபடி வெகு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். வெகு சிறப்பான நடிப்பினையும் கொடுத்திருக்கிறார். அவரது கதாபாத்திர வடிவமைப்பு வெகு சிறப்பு.

மற்றபடி விஜய் ஆண்டனியின் வலது கரமாக செயல்படும் செல் முருகன், வாகை சந்திரசேகர் , கிரிஷ் ஹாசன், ஷோபா விஸ்வநாத் உள்ளிட்டோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளார் ஷெல்லி ஆர் காலிஸ்ட்டின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது. காட்சிகளை பரபரப்பாக காட்டுவதற்கு ஒளிப்பதிவு சிறப்பாக செயல்பட்டுள்ளது.

அதேபோல் விஜய் ஆண்டனியின் பின்னணி இசையும் படத்திற்குப் பெரும்பலமாக அமைந்துள்ளது. பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருப்பதோடு, படம் பார்ப்பவர்களை திரையோடு ஒன்றினைய வைக்கிறது.

தற்போதைய சூழலில் அரசு என்பது சமானியர்களுக்கானது அல்ல. அது  கார்ப்பொரேட் மற்றும் பெரும் முதலாளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மட்டுமே உரித்தானது. என்பதை இந்தத் திரைப்படத்தின் மூலம் நினைவு படுத்தியிருக்கிறார். இயக்குநர் அருண் பிரபு .

‘சக்தித் திருமகன்’ – சாமனியர்கள் பார்க்க வேண்டிய படம்!