கண்களுக்கு விருந்து படைக்கும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட பிறகு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த புதன்கிழமை அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஸ்டோன்பெஞ்ச் பிலிம்சின் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் முதன்மை வேடங்களில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல சுவாரசியமான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதோடு, திரைப்படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பெரும் அரங்கங்களும் அமைக்கப்பட்டன. கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் அப்படியொரு பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு மிக முக்கியமான காட்சிகள் சில அங்கு பதிவு செய்யப்பட்டன.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் கூறுகையில்,
“படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பிரமாண்டமான திரைப்படம் அதிகப்பொருட்செலவில் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை திரைக்கு கொண்டு வர நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில்,
“எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தியளிக்கும் அனுபவமாக ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படப்பிடிப்பு அமைந்திருந்தது. மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படம் சிறப்பாக உருவாகியுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு தற்போது நாங்கள் தயாராக உள்ளோம். பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வழங்கும் என்று நான் நம்புகிறேன். இந்த மிகப்பெரிய படத்திற்கு ஆதரவளித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.
‘மெர்குரி’ மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ போன்ற படங்களில் கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய, தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். ‘ஜிகர்தண்டா’ உட்பட கார்த்திக் சுப்பராஜின் பல படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ‘ஜிகர்தண்டா’வை எடிட்டிங் செய்து தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷனின் உதவியாளரான ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பை கையாளுகிறார்.
விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான அதிரடி நகைச்சுவை கலந்த மாபெரும் வெற்றிப் படமான ‘ஜிகர்தண்டா’வைப் போலவே இந்தப் படமும் ஆக்ஷன் கேங்ஸ்டர் கதையமைப்பில் உருவாகிறது.
பல திருப்பங்கள் நிறைந்த ஜிகர்தண்டாவை போல் இப்படமும் இன்னும் விறுவிறுப்புடன் கூடிய ஒரு டிரெண்ட் செட்டர் படமாக அமையும் என்று படக்குழு உறுதி செய்துள்ளனர்.
ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்காக கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, தமிழ் தெலுங்கு, மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இவ்வருடம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.