தமிழ் சினிமாவில் புத்தம் புதிய கதைக்களத்துடன் இளம் இயக்குநர்கள் அறிமுகமாகி வருகிறார்கள். இதனை சமீபமாக வரும் கதைக்களங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே வந்திராத ஒரு புத்தம் புதிய கதைக்களத்துடன் இளம் படை ஒன்று களம் காணவுள்ளது.
இந்தக் கதையைக் கேட்டுவிட்டு உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதனை இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கவுள்ளார். இவர் யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியவில்லை. விளம்பரத் துறையில் பணிபுரிந்து, சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.
பேரழிவுக்கு பிந்தைய உலகம் எப்படியிருக்கும் என்ற மையக்கருத்தைக் கொண்ட களமாக இந்தப் படம் உருவாகிறது. ‘கலியுகம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ். ராமகிருஷ்ணா பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார். ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகும் இதன் படப்பிடிப்பு 2021- ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் தொடங்குகிறது.
முழுக்க முழுக்க இளம் படையே, இந்தப் படத்தில் பணிபுரியவுள்ளது. ஜாம்பவான் பி.சி.ஸ்ரீராமிடம் பணிபுரிந்த ராம்சரண் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
காட்சியமைப்பு, கதைக்களம் என அனைத்திலும் புதுமையைக் கொண்டுவரவுள்ள இந்தப் படம் கண்டிப்பாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்கிறார்கள்