பாரதிராஜா, சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்து, சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ஈஸ்வரன். வரும் ஜனவரி 14 ல் பொங்கலை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘மாநாடு’ படமும் முடிவடையும் தருவாயில் உள்ளது.
இதனை தொடர்ந்து சிலம்பரசன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ஸ்டூடியோ க்ரீன்’ K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் படத்தினை “சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை” ஆகிய படங்களை இயக்கிய N. கிருஷ்ணா இயக்குகிறார்.
சிலம்பரசன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு “பத்து தல” என பெயரிட்டுள்ளனர்.
இது குறித்து தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா கூறியதாவது…
ஸ்டுடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் சார்பில் பிரமாண்ட இப்படத்தை அறிவிப்பது பெருமையாக உள்ளது. எஸ் டி ஆர் அதீதமான சுறுசுறுப்புக்கும், உற்சாகத்திற்கும் பெயர் பெற்றவர் தற்போது தன்னையே முழுதாக மாற்றி வேறொரு பரிணாமத்தில் படு உற்சாகமாக அவர் வந்து நிற்பது, பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
இத்திரைப்படம் முடிவான உடனேயே அவரது கதாப்பாத்திரத்தை ஒட்டி, மிகச்சரியான, அதிரடியான தலைப்பை தேடினோம். பல்வேறு பெயர்களை பரிசீலித்த பின்னால் “பத்து தல” தலைப்பு உறுதிசெய்யப்பட்டது. ரசிகர்கள் படம் பார்க்கும் போது தலைப்பின் அர்த்தத்தை அதன் ஆழத்தை படம் வழியே கண்டிப்பாக உணர்வார்கள்.
கௌதம் கார்த்திக் ஸ்டுடியோ க்ரீன் (Studio Green) நிறுவனத்துடன் ஏற்கனவே பணிபுரிந்துள்ளார். எங்களை பொறுத்தவரையில் அவர் எங்கள் குடுமபத்தில் ஒருத்தர். “பத்து தல” படத்தில் அவரது பாத்திரம் வெகு கனமானது. அவரது திரை வாழ்வில் இப்படம் அவருக்கு மிகப்பெரும் பெயரை பெற்றுத்தரும் படமாக இருக்கும்.
எனது முதல் தயாரிப்பான “சில்லுனு ஒரு காதல்” திரைப்படத்தை இயக்கிய காலத்திலிருந்து, இயக்குநர் ஓபிலி N. கிருஷ்ணா அவர்களும் நானும் பல்லாண்டுகளாக நல்லதொரு நட்புறவினை பேணி வருகிறோம்.
திரையுலகின் பெரும் ஆளுமைகள் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் மேலும் பல ஆச்சர்யங்களும் இணையவுள்ளது. அது பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். என்றார்.