‘ஜே எஸ் பி பிலிம் ஸ்டுடியோஸ்’ சார்பில், ஜே எஸ் பி சதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் படம், சிங்கப்பெண்ணே. இதில், ஷில்பா மஞ்சுநாத், ஆர்த்தி, ஏ. வெங்கடேஷ், பிரேம், எம். என். தீபக் நம்பியார், செண்ட்ராயன், மாதவி லதா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நீச்சல் வீராங்கனை, ஆக வேண்டும் என்பது ஷில்பா மஞ்சுநாத்தின் தீராத ஆசை. சந்தர்ப்ப சூழ்நிலையால், அவர், ஒரு நீச்சல் பயிற்சியாளராக இருந்து வருகிறார். அப்பாவின் அழைப்பின் பேரில், ஷில்பா மஞ்சுநாத் தனது சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கே நீச்சல்+ சைக்கிளிங்+ ஓட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளில் திறமை மிக்க சிறுமி ஆர்த்தியை சந்திக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, பெற்றோர் இல்லாத ஆர்த்திக்கு முறையான பயிற்சிகளை அளிக்கும் ஷில்பா மஞ்சுநாத், அவரது திறமையினை மேம்படுத்துகிறார். வழக்கமான பயிற்சியில் ஈடுபடும் ஆர்த்தி, கலெக்டர் ஒருவரின் மகளை விட வேகமாக ஓடுவதோடு, தேசிய அளவிலான சாதனை நேரத்தை கடந்தும் விடுகிறார். இதனால், கலெக்டரின் ஒட்டுமொத்த அதிகாரமும் ஒன்று சேர்ந்து ஆர்த்தியை ஒழித்துவிட முயற்சிக்கிறது. இதை எதிர்கொள்ளும் ஷில்பா மஞ்சுநாத்தும் சாதித்தார்களா, இல்லையா? என்பது தான், சிங்கப்பெண்ணே படத்தின் கதை.
பயிற்சியாளராக நடித்திருக்கும் ஷில்பா மஞ்சுநாத், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவரது தோற்றம், விளையாட்டு பயிற்சியாளருக்கான மிடுக்கோடு இருக்கிறது.
நீச்சல்+ சைக்கிளிங்+ ஓட்டம் ஆகிய, மூன்று விளையாட்டுகளையும் ஒன்றிணைக்கும், ட்ரையத்தலான் வீராங்கனையாக நடித்திருக்கும் ஆர்த்தி, நிஜத்திலும் இந்திய அளவிலான சாம்பியன் என்பதால், அவரது கதாபாத்திரத்தினை உணர்ந்து எளிதாக நடித்துள்ளார்.
வில்லனாக நடித்திருக்கும் மறைந்த நடிகர் எம். என். நம்பியாரின் வாரிசு தீபக் நம்பியாரின் நடிப்பு, பாராட்டும்படியாக இருக்கிறது.
கதை பழையது தான் என்றாலும் யூகிக்க முடியாத திரைக்கதையினில் ஆச்சர்யப் படுத்தியிருக்கிறார், அறிமுக இயக்குநரான ஜே எஸ் பி சதீஷ். மற்றபடி, எல்லாப் படங்களிலும் பார்த்த காட்சியமைப்புகள் தான்.
ஒளிப்பதிவாளரும், பின்னணி இசையமைப்பாளரும் இயக்குநருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்.
சமுத்திரக்கனி கௌரவ தோற்றம், சொல்வதற்கு ஒன்றுமில்லை!
சிங்கப்பெண்ணே, பெண்களுக்கான ஒரு மோட்டிவேஷனல் படம்.