வெற்றிமாறனின் ‘க்ராஸ்ரூட் கம்பெனி’ வழங்க, எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிராஜ் எஸ், நிலோபர் சிராஜ் ஆகியோரது தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் சார். இப்படத்தை ரோமியோ பிச்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் விமல், சாயாதேவி ,சிராஜ் எஸ், சரவணன், வ.ஐ.ச ஜெயபாலன், விஜய் முருகன், சரவண சக்தி, பிரானா, எலிசபெத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘கன்னி மாடம்’ திரைப்படத்திற்கு அடுத்தாக, கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார், போஸ் வெங்கட். ஒளிப்பதிவு இனியன் ஜெ. ஹரிஷ்,இசை சித்துகுமார், பாடல்கள் விவேகா, ஆந்தகுடி இளையராஜா, மற்றும் இளம் கவி அருண். எடிட்டிங் ஸ்ரீஜித் சாரங், கலை பாரதி புத்தர்.
மாங்கொல்லை என்ற கிராமத்தில் 1960 களில் தொடங்கி நடக்கும் கதையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது, சார்.
மாங்கொல்லை கிராமத்தில் வசதி படைத்த வ.ஐ.ச ஜெயபாலன் தலைமையிலான கூட்டத்தினர், நலிந்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை கல்வியை திட்டமிட்டு தடுத்து, மூட நம்பிக்கையின் மூலம் அவர்களை அடிமைகளாக நடத்தி வருகின்றனர். இதை சரவணன் எதிர்த்து அவர்களுக்கான கல்வியை பெற்றுத்தர விரும்புகிறார். அவரை பைத்தியமாக சித்தரித்து அவரை மேலும் செயல்படவிடாமல் தடுத்து விடுகின்றனர். அதற்கு பிறகு, சரவணின் மகன் விமல் ஊர் மக்களுக்கு கல்வி கிடைக்க செயல்படுகிறார். அவரையும் சாமியின் பெயரால் பைத்தியமாக சித்தரிக்கின்றனர். அதற்கு பிறகு என்ன நடந்தது? என்பது தான் “சார்’’ படத்தின் கதை.
கல்வியின் அவசியத்தையும், ஆசிரியர்களின் பெருமையையும் எளிமையாகவும், வலிமையாகவும் சொல்லியிருக்கிறார், இயக்குநர் போஸ் வெங்கட் . எளிய மக்களின் நம்பிக்கையை சாதகமாக எடுத்துக்கொண்டு, கடவுள் நம்பிக்கையின் பெயரால் கல்வியை கிடைக்கவிடாமல் செய்யும் அயோக்கியத்தனத்தினை கதையின் ஊடாக அப்பட்டமாக சொல்லியிருப்பது சிறப்பு.
‘வாகை சூடவா ‘படத்திற்குப் பிறகு விமல் பள்ளி ஆசிரியராக நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்திருக்கிறார். தோற்றத்திலும் வித்தியாசம் காட்டி நடித்திருப்பதுடன், காதல் காட்சிகளிலும், அடிதடி காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.
விமலை விரும்பும் சக ஆசிரியையாக நாயகி சாயாதேவி, அழகுடன் கூடிய அசத்தலான நடிப்பினை கொடுத்திருக்கிறார். இவர்கள் இருவருக்குமான காதல் காட்சிகள் ரசனையாக இருக்கிறது.
விமலின் அம்மாவாகவும் சரவணனின் மனைவியாகவும் நடித்துள்ள ரமாவிற்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்பு அதை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
பருத்திவீரன் சரவணன், ஆசிரியர்களின் பெருமையையும், பொறுப்பினையும் எடுத்துச்சொல்லும் அழகான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு நல்ல ஆசிரியராகவும், பைத்தியம் பிடித்தவராகவும் மாறுபட்ட நடிப்பினை கொடுத்துள்ளார்.
விமலின் நண்பனாக நடித்து, அவருக்கு துரோகம் செய்யும் வில்லன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் சிராஜ் நடித்துள்ளார். அவரது தோற்றமும், பார்வையும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. சிறப்பாக நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சித்துகுமாரின் இசையில் பாடல்கள் ஓகே! ‘படிச்சிக்கிறோம் பொழச்சிக்கிறோம் ‘பாடல் சிறப்பாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ. ஹரிஷ். படத்தின் பலமாக இருக்கிறார்.
மக்களுக்கு எந்தவகையிலும் பயன் தராத வணிக சினிமாக்களுக்கு மத்தியில் படிப்பின் அவசியத்தை எளிதாகவும் வலிமையாகவும் சொல்லியிருக்கும் இந்த ‘சார்’ வணக்கத்துக்குரியவர்.