‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ சார்பில், லலித்குமார் தயாரித்துள்ள திரைப்படம், சிறை. இதில், விக்ரம் பிரபு, எல். கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில் குமார், ஆனந்த தம்பி ராஜா, மூணார் ரமேஷ், பி. எல். தேனப்பன் மற்றும் பலர் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, எழுதி இயக்கியிருக்கிறார்.
‘சிறை’ திரைப்படத்தின் கதை, 1997 முதல் 2003 ஆண்டுகளுக்கிடையே நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கொலை குற்றவாளியான அப்துல் ரவூஃப் (எல். கே. அக்ஷய் குமார்), மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 1998 ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு பிறகு, அவர் வேலூர் சிறையில் அடைக்கப்படுகிறார். ஆண்டுகள் கடந்த நிலையில், ஆயுதப்படைக் காவலர் கதிரவன் (விக்ரம் பிரபு) தலைமையில், அப்துல் ரவூஃப்பை கொலை நடந்த எல்லைக்குட்பட்ட, சிவகங்கை கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக, பஸ்ஸில் அழைத்துச்செல்கின்றனர்.
சிவகங்கைக்கு செல்லும் வழியில் விக்கிரவாண்டியில், பஸ் சாப்பாட்டிற்காக நிறுத்தப்படுகிறது. அந்த இடைவெளியில், கைதி துப்பாக்கியுடன் கைதி தப்பி விடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை சற்றே பரபரப்பாக சொல்லியிருக்கிறார், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி.
ஆயுதப்படை காவலர் கதிரவன், கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், விக்ரம் பிரபு. முதல் படமான கும்கி’யில் எப்படி நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தாரோ, அதேபோல் அவரது 25 வது படமான இந்த ‘சிறை’ படத்திலும், தனது பக்குவப்பட்ட நடிப்பின் மூலம் வெகுவாக கவர்கிறார். ஒரு போலீஸ்காரராக கைதியை நடத்தும் விதத்திலும், கோர்ட்டில் நடக்கும் நடைமுறைகளை, லாவகமாக அனுகும் போதும், தப்பிச்செல்லும் கைதியை சுட்ட பிறகு நடக்கும் விசாரணையை எதிர்கொள்ளும் காட்சியிலும், நன்கு அனுபவப்பட்ட, நேர்மையான, உண்மையான ஆயுதப்படை காவலர் கதிரவன் போலவே தெரிகிறார்.
விக்ரம் பிரபுவின் மனைவியாக, சிறிய நடித்திருக்கிறார், ஆனந்த தம்பிராஜா.
‘சிறை’ படத்தின் தயாரிப்பாளர், லலித்குமாரின் மகன் எல்.கே.அக்ஷய் குமார், திரைக்கதையை நகர்த்திச்செல்லும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து, அறிமுகமாகியிருக்கிறார். அப்துல் ரவூஃப், என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி தோற்றமளிக்கிறார். சிறப்பாகவும் உணர்வுகளை வெளிப்படுத்தியும் நடித்திருக்கிறார். குறிப்பாக, கோர்ட்டில் பி எல். தேனப்பன் காலிலும், விக்ரம் பிரபுவின் காலிலும் விழுந்து கதறும் காட்சியில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார். முதல் படத்திலேயே குறை சொல்ல முடியாத நடிப்பு. எல்.கே.அக்ஷய் குமாருக்கு சிறந்த நடிகராக வர எல்லாத்தகுதியும் இருக்கிறது.
அப்துல் ரவூஃப்பை காதலிக்கும், கலையரசி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், அனிஷ்மா அனில்குமார். நடிப்பினை வெளிப்படுத்துவதற்கு நிறைய காட்சிகள்.அதை சிறப்பாக பயண்படுத்திக் கொண்டுள்ளார்.
மூணார் ரமேஷ், பி. எல். தேனப்பன், ஹரி ஷங்கர் நாராயணன், ரம்யா சுரேஷ் போன்றோரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.
இசை, ஜஸ்டின் பிரபாகரன். பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், பின்னணி இசை, காட்சிகளை மேலும் சிறப்பாக்கியிருக்கிறது. கைதி தப்பிச்செல்ல முயற்சிக்கும் போது, பஸ்ஸூக்குள் நடக்கும் சண்டைக்காட்சியில், ஒளிப்பதிவு, எடிட்டிங், VFX, நடிகர்கள், சண்டைக்காட்சி அமைத்தவர் என, அனைவரும் சிறப்பான பங்கினை கொடுத்துள்ளனர்.
எடிட்டிங், பிலோமின் ராஜ். சண்டை அமைப்பு, PC ஸ்டண்ட்ஸ். VFX, Spectre Post. Sound Mix, SP நாராயணன்.
சிறை படத்தின் கதையை, தமிழ் எழுதியிருக்கிறார். திரைக்கதையை, தமிழ் மற்றும் சுரேஷ் ராஜகுமாரி இருவரும் சேர்ந்து எழுதியுள்ளனர்.
படம் பரபரப்பாக சென்றாலும், திரைக்கதையில் அவ்வப்போது தொய்வு ஏற்படுகிறது. அப்துல் ரவூஃப், கலையரசி காதலில் போதிய அழுத்தம் இல்லை. அதை இன்னும் எமோஷனலாக உருவாக்கியிருக்கலாம். மேலும் சில இடங்களில், தெளிவு படுத்தப்படாத காட்சிகள். லாஜிக் மீறல்கள். திணிக்கப்பட்ட காட்சிகள் ஆகியவை படத்தின் பலவீனங்களாக இருக்கின்றன.
ஆயுதப்படை காவலர்களின் சிரமங்கள் மற்றும் விசாரணை கைதிகளின், அநியாய சிறைவாசம். என, சிறை படத்தின் கதை, இரண்டு முக்கியமான பிரச்சனைகளை பேசியிருக்கிறது. அதில், அதி முக்கியமான பிரச்சனையாக எடுத்துக்கொண்டிருப்பது, விசாராணை நடைபெறாமலேயே பல வருடங்களாக சிறையில் தவிக்கும் ஒரு சாமானியனைப் பற்றியது தான். இது வரவேற்கத்தக்கது. ஆனால், அது அப்துல் ரவூஃப் என்ற இஸ்லாமிய இளைஞனுக்கு மட்டுமே நடக்கும் தொனியில் படமாக்கப்பட்டிருப்பது, ஆபத்தானது. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பௌத்தம், ஜைனம் போன்ற மதத்தினரும் விசாரணை கைதிகளாக, பலர் அநியாய சிறை வாசத்தை அனுபவித்து தான் வருகிறார்கள்.
இன்னொரு அப்பட்டமான திணிப்பு. கைதி அப்துல் ரவூஃப் இஸ்லாமியர் என்பதால், துப்பாக்கியை லோடு செய்து கொண்டு வந்தேன். என, விக்ரம் பிரபுவுடன் வந்த போலீஸ் கூறுவார். இதற்கு, இன்ஸ்பெக்டர் மூனார் ரமேஷ் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார். இந்த காட்சி இஸ்லாம் சமூகத்தினரின் அனுதாபம் தேடுவதற்காக வைக்கப்பட்ட காட்சி போல் இருக்கிறது. இது ஒரு சார்பாக சித்தரிக்கப்பட்டிருப்பதால், இதை வெகுஜன ரசிகர்கள் ரசிப்பதற்கு வாய்ப்பில்லை!
மூன்று காவலர்கள், கைவிலங்கு, நீண்ட சங்கிலி பூட்டிய கைதியுடன் பஸ்ஸில் பயணிக்கும் போது, சாப்பாட்டிற்காக பஸ் நிற்கிறது. இவர்கள் வராத நிலையில், கண்டக்டர் எப்படி பஸ்ஸை மீண்டும் எப்படி எடுத்துச்செல்வார்? இதில், துளியும் லாஜிக்கில்லை.
மற்றபடி, நடிகர்களின் சிறந்த நடிப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்ற தொழில் நுட்பம். என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. நேர்மையான திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரசியம் ஏற்படுத்தியிருந்தால், 2025 ஆம் வருடத்தின் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாகியிருக்கும்!