‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ நிறுவனத்தின் சார்பில், S.S.லலித்குமார் தயாரித்துள்ள திரைப்படம், சிறை. இதில் நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அனந்தா நடித்திருக்கிறார். அதோடு, தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார், இப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்திருக்கிறார். ப்படத்திற்கு, ‘டாணாக்காரன்’ படத்தின் இயக்குநர் தமிழ், கதை எழுதியிருக்க, வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருக்க, மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிலோமின் ராஜ் எடிட்டிங்.
‘சிறை’ திரைப்படம், விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவாகியுள்ள 25 ஆது திரைப்படம், இதில் மீண்டும் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். கிறிஸ்துமஸ் தினமான 25 ஆம் தேதி, தனது 25 ஆவது படமாக சிறை வெளிவருவதில், விக்ரம் பிரபு உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்.
‘சிறை’ படம் குறித்து விக்ரம் பிரபு கூறியதாவது..,
‘ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது, சிறை. ஏற்கனவே சில படங்களில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறேன். இருந்தாலும், இந்தப்படத்தில் எனது தோற்றமும், நடிப்பும் வித்தியாசமாக இருக்கும். இயக்குநர் தமிழ், அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கதையாக எழுதியிருக்கிறார். அது வித்தியாசமாகவும், புதிதாகவும் இருக்கிறது. சிறை படத்தின் இயக்குநர் சுரேஷ், வெற்றிமாறனிடம் இணை இயக்குநராகப் பல வருடங்களாக இருந்துள்ளார். இருவரது அனுபவமும் திரைக்கதையை நேர்த்தியாக வடிவமைக்க உதவியிருக்கிறது. அது ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவமாக இருக்கும்.
ஒரு சில காட்சிகளில் நடிக்கும்போது, இயக்குநர் தமிழை நேரில் அழைத்து, அவரை அருகில் வைத்துக்கொண்டு நடித்தேன். அது எனக்கு வசதியாகவும், அந்த கதாபாத்திரத்தை தத்ரூபமாக வெளிப்படுத்தவும் முடிந்தது. அந்த கதாபாத்திரத்திற்கான நடை, உடை பாவனைகளை தமிழின் வழியாகத்தான் வெளிப்படுத்தினேன். சிறை படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரின் மகன் அக்ஷய் குமார் நடித்திருக்கிறார். புதிதாக நடிக்க வந்தது போல் இருக்காது. அனுபவப்பட்ட நடிகரைப்போல் நடித்திருக்கிறார்.
சிறை 25 படம், 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாவது குறித்து கூறியதாவது..,
திரும்பிப் பார்த்தால் 13 வருடம் ஓடிவிட்டது. எப்படி என்றே தெரியவில்லை. பல படங்களில், பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இதுவரை பல்வேறு குணாதிசியங்களை கொண்ட மனிதர்களை பார்த்திருக்கிறேன். அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். இப்போது சிறை 25 வது படம்.
அப்பா எப்பவுமே நான் நடிக்கும் படங்களின் கதையை கேட்டதில்லை. நீயே முடிவு எடு. எனக்கூறி விடுவார். அவர் நடிக்கும் போது ஏகப்பட்ட பிரஷர். ஒரு பெரிய வீட்டு பின்புலத்தில் இருந்து வந்திருப்பதால், தாத்தாவின் புகழ் வெளிச்சத்தில் மங்கிவிடாமல் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அது எனக்கு பல மடங்கு. தாத்தா, அப்பா இருவரையும் மீறி என்னை நிரூபிக்க வேண்டும். கடவுள் அருளால், அது நடந்திருக்கிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அதுவே என்னை வழி நடத்தி செல்வதாக உணருகிறேன்.
இதுவரை நடித்த 25 படங்களில், முதல்படம் ‘கும்கி’ கல்ட் ஹிட். இதுபோல், நான் நடித்த சில படங்களை பெருமையாக சொல்லிக்கொள்ள முடியும். எல்லா வகையான படங்களிலும் நடித்து விட்டேன். ‘காட்டி’ எனக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. அந்தப் படத்தின் மூலம், அனுஷ்கா எனக்கு நல்ல, நெருக்கமானத் தோழியாக கிடைத்தார். அப்போது முதல் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வருகிறார். எங்கேயாவது என்னுடைய பேட்டிகளையோ, எனது சம்பந்தப்பட்ட விஷயங்களையோ பார்க்க நேர்ந்தால் அது குறித்து பேசுவார். எனது பேட்டிகளை எனக்கு அனுப்பி இதில் நன்றாக பேசியிருந்தீர்கள் என சொல்வார். நல்லத் தோழி.
என்னுடைய ஆசை, எல்லா ஜானர்களிலும் நடிக்க வேண்டும்லதுவே ஒரு நடிகரை முழுமையானதாக ஆக்கும் என, நான் நினைக்கிறேன். ‘சிறை’ படம், எல்லோருக்கும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும், என்றார்.