‘சைரன்’ –  விமர்சனம்!

‘Home Movie Makers’ சார்பில், சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள படம், சைரன். இதில், ஜெயம் ரவி நாயகனாக நடித்திருக்க அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார், அனுபமா பரமேஸ்வரன். கீர்த்தி சுரேஷ், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன், சமுத்திரக்கனி, யோகிபாபு, சாந்தினி,  துளசி, அருவி மதன், அழகம்பெருமாள், ‘அருவி’ மதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சைரன் படத்திற்கான கதை, திரைகதையை எழுதி இயக்கியிருக்கிறார், ஆண்டனி பாக்யராஜ். இவர், ‘இரும்புத் திரை’, ’விஸ்வாசம்’, ‘ஹீரோ’ ஆகிய படங்களில் திரைக்கதையினில் பங்கு பெற்றவர்.

பொதுவாக குற்றவாளிகள், குற்றம் செய்த பின்னர் தான் தண்டனையை அனுபவிப்பார்கள். ஆனால் சைரன் படத்தில், ஜெயம் ரவி தண்டனையை அனுபவித்த பிறகு குற்றம் செய்கிறார். ஏன், எதற்கு, எப்படி? என்பது தான், சைரன் படத்தின் விறுவிறுப்பான, க்ரைம் டிராமா, திரைக்கதை!

ஆம்புலன்ஸ் ஓட்டுனர்,ஜெயம் ரவி. ஒரு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற கைதி. 14 ஆண்டுகள் கழித்து, ஆசை ஆசையாக, தன்னுடைய ஒரே மகளை பார்க்க, பரோலில் வீட்டுக்கு வருகிறார். ஆனால், ஜெயம் ரவி மீது, அவர் வெறுப்பைக் காட்டுகிறார்.

பரோலில் வந்திருக்கும் ஜெயம் ரவியின் பாதுகாப்பிற்காக, போலீஸ் யோகிபாபு நியமிக்கப்படுகிறார். இருவரும் டாஸ்மாக் செல்கிறார்கள். அங்கே முக்கியமான அரசியல் பெரும்புள்ளி, அழகம்பெருமாள் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அது தெரியாமலேயே, ஜெயம் ரவியும், யோகி பாபுவும் குடித்துவிட்டு, சென்று விடுகின்றனர்.

அரசியல்வாதி, அழகம் பெருமாள் கொலை வழக்கை விசாரிக்கும், போலீஸ் இன்ஸ்பெக்டரான கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவியின் மேல் சந்தேகம் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்துகிறார். ஆனால், தடயங்கள் எதுவும் ஒத்து போகவில்லை. இருந்தும், ஜெயம் ரவி தான் கொலையாளி என, தீர்க்கமான முடிவோடு விசாரணையை துரிதப்படுத்துகிறார். உண்மையிலேயே கொலை செய்தது யார்? இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே சைரன் படத்தின் விரிவான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

படத்தின் துவக்கத்திலேயே, ரசிகர்கள் கதைக்குள் சென்றுவிட, அதன்பிறகு அடுத்தடுத்த விறுவிறுப்பான காட்சிகள், இடைவேளை வரை தொடர்கிறது. இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சஸ்பென்சை வைத்து, க்ளைமாக்ஸ் வரை நகர்த்திச்செல்கிறார், இயக்குநர் அந்தோணி பாக்யராஜ். வழக்கமான கதையாக இருந்தபோதும் திரைக்கதை, சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.

ஜெயம் ரவி, இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தினில் நடித்திருக்கிறார். நடுத்தர வயது தோற்றத்துடன், ஆர்பாட்டமில்லாத நடிப்பினில், அமர்க்களப்படுத்தி விடுகிறார். ஆம்புலன்ஸ் டிரைவராக, சிகிச்சை தேவைப் படுபவர்களுக்கு உதவும் காட்சியிலும், பல வருடங்களாக, மகளை பார்க்கமுடியாத சோகத்தில், தவிக்கும் காட்சிகளிலும், இருவேறு மாறுபட்ட நடிப்பினை அழகாக வெளிப்படுத்தி, தாய்மார்களின் பரிதாபத்தினை பெற்றுவிடுகிறார். அப்பாவித்தனமான தோற்றத்தில், அதிரடி காட்டும் சண்டைக்காட்சிகளில் ரசிகர்களை, எளிதில் கவர்ந்து விடுகிறார்.

படம் முழுவதும், ஜெயம் ரவியுடனேயே வரும் யோகிபாபு, ரசிகர்களை சிரிக்கவைக்கிறார். ஜெயம் ரவியைப்போலவே, யோகிபாபுவும் படத்தின் பலமாக இருக்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  கீர்த்தி சுரேஷ், அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை! சுண்டெலிக்கு ‘கிடா மீசை’ வைத்து போல் இருக்கிறது! நடிப்பதற்கும் பெரிதாக எதுவும் இல்லை!

ஜெயம் ரவியின், மாற்றுத் திறனாளி மனைவியாக, நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், குறைந்த காட்சிகளில் நடித்திருந்தாலும், ஓகேவான  நடிப்பினை கொடுத்துள்ளார்.

சாதி வெறிபிடித்த , டி.எஸ்.பி. கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனியின் நடிப்பில், குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை!

வில்லன்களாக நடித்திருக்கும் அழகம் பெருமாள், அஜய், ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்த துளசி, தங்கையாக நடித்த சாந்தினி, மகளாக நடித்த சிறுமி என அனைத்து நட்சத்திரங்களும் தங்களது நடிப்பினை கதாபாத்திரத்திற்கு ஏற்ற படி, கொடுத்துள்ளனர்.

படத்தில், வசனங்கள் பல இடங்களில் பளிச்சிடுகிறது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. அதிலும், அப்பா-மகள் பாசத்தை சொல்லும், ‘கண்ணம்மா’ பாடல் இனிமையாக இருக்கிறது.

சாம் சி எஸ்சின் பின்னணி இசை, காட்சிகளுக்கு விறுவிறுப்பினை கூட்டியிருக்கிறது.

செல்வகுமாரின் ஒளிப்பதிவு, படத்திற்கான பெரும் பலமாக இருக்கிறது. அதேபோல் ரூபனின் எடிட்டிங்கும் பலம். காட்சிகளுக்கு விறுவிறுப்பு ஏற்படுத்தியுள்ளது.

சைரன் – சஸ்பென்ஸ், க்ரைம் டிராமா பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்!