ஆறாம் நிலம் – விமர்சனம்

தமிழர்களின் பயன்பாட்டிலுள்ள நிலங்கள் குறிஞ்சி ,முல்லை,மருதம் ,நெய்தல், பாலை என ஐவ்வகை நிலங்கள் மட்டுமல்ல. அடுத்தபடியாக ஒரு நிலமும் அதாவது, பாலை எப்படி பயனற்று கிடக்கிறதோ, அதேபோல் கண்ணிவெடிகள் புதைக்கபட்டு எந்த உயிரினமும் வாழத்தகுதியற்ற ஒரு நிலமாக ‘ஆறாம் நிலம்’ இருக்கிறது, என கோடிட்டு காட்டியுள்ளார். படத்தின் இயக்குனர் அனந்தராமன்.

ஈழத்தில் நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில், போருக்கு பின் அங்கே வசிக்கும் மக்களின் நிலையை, இயல்புநிலை மீறாவண்ணம் மிக அழகாக படம்பிடித்துள்ளனர்.

ஈழம் தொடர்பாக இதுவரை வந்த படங்களிலிருந்து இந்தப்படத்தின் கதைகளம் தனித்திருக்கிறது. மேலும் நம்பகத்தன்மையுடன் இயல்பான பின்னணியில் படமாக்கப்பட்டிருக்கிறது சிறப்பு.

முதன்மை கதாபாத்திரங்களில் நவயுகா, மன்மதன் பாஸ்கி இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அதிலும் முன்னாள் போராளியாகவும், கண்ணிவெடிகளை செயலிழக்கச்செய்யும் ஒரு குழுவின் பொறுப்பாளராக பாஸ்கியினுடைய நடிப்பு மிக இயல்பு. ஒரு போராளியை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

கணவனைத் தேடும் பெண்ணாகவும், பிள்ளைக்குத் தாயாகவும்,  உள்நாட்டு போருக்குப் பின்னரான அத்தனை நெருக்கடிகளையும் சுமந்து கொண்டிருக்கும் அபலைபெண்களின் பிரதிபலிப்பை கண்முன் நிறுத்துகிறார் நவயுகா குகராஜா.

கற்பனையாக அப்பாவுடன் விளையாடுவது போல் பாசாங்கு செய்யும் சிறுமி ஜீவேஸ்வரன் அன்பரசி நடிப்பால் மனம் கனக்கிறது.

படத்தில் வரும் வசனங்கள் இன்றைய  இலங்கை அரசையும், உலக அரசியலையும் நிர்வாணபடுத்துகிறது.

கண்ணிவெடி அகற்றும்போது கை, கால் இழப்புகள் ஏற்பட்டு மரணத்தை அடைபவர்களும் தமிழர்களே என்பது சோகம்.

உலக நாடுகளால் கைவிடப்பட்ட அப்பாவி ஈழத்தமிழர்களுக்கு விடியல் எப்போது? என்ற கேள்வியுடன் படம் முடிவதாக உணர்வது. மனிதகுலத்தின் மீது விழுந்த அடி!

ஐபிசி தமிழ் ஊடக நிறுவனம் தயாரித்துள்ள  ‘ஆறாம் நிலம்’ திரைப்படம் நாளை முதல்  ஐபிசி தமிழ் (IBC Tamil) யூடியுப் சேனலில் ஒளிபரப்பாகிறது.