விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Vijay Sethupathi and Samyuktha Starrer Pan-Indian Project Wraps Up Shoot
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ (Slum Dog: 33 Temple Road) திரைப்படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புப் பணிகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளன. பூரி கனெக்ட்ஸ் (Puri Connects) நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்ட தயாரிப்பாளர்களான பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இப்படத்தை விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவதற்காகப் படக்குழுவினர் விளம்பரப் பணிகளில் களம் இறங்கியுள்ளனர்.
மாஸ் கதை சொல்லும் பாணி மற்றும் விறுவிறுப்பான கமர்ஷியல் திரைமொழிக்குப் பெயர் பெற்ற இயக்குநர் பூரி ஜெகன்நாத், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இதனை உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல நடிகை சம்யுக்தா நடித்துள்ளார். இவர்களுடன் தபு, துனியா விஜய், ஜரினா வஹாப், பிரம்ஹாஜீ மற்றும் வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். கதையில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான முக்கியத்துவம் இருப்பதை ஏற்கனவே வெளியிடப்பட்ட கதாபாத்திர அறிமுகக் காணொளிகள் மற்றும் முன்னோட்டங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சாம் கே. நாயுடு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ‘அனிமல்’ படப் புகழ் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார். சந்தோஷ் நூஜில்லா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கனாடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் அடுத்தடுத்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.