சூரரைப் போற்று – விமர்சனம்!

ஏர் டெக்கான் (Air Deccan)  நிறுவனத்தை நிறுவிய கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத் எழுதிய Simply Fly : A Deccan Odyssey என்ற புத்தகத்தினை தழுவி கற்பனைகள் கலந்து உருவாக்கப்பட்டுள்ள படமே “சூரரைப் போற்று”.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி, சூர்யா, அபர்னா பாலமுரளி நடிப்பில் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள இந்தப்படம் சூர்யா ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே வரவேற்பை வெகுஜன சினிமா ரசிகர்களிடம் பெறுமா?

எந்தவிதமான அடிப்படை வசதிகளையுமே பெறாத சிறிய கிராமத்தின் வாத்தியார் மகன் சூர்யா. அவரது தந்தை ‘பூ’ ராமு. அவர் தன்னுடைய கிராமத்திற்கு தேவையான அடிப்படை தேவைகளை தொடர்ச்சியான  அகிம்சை போரட்டத்தின் மூலம் பெற்று தருகிறார். ஆனால் சூர்யாவோ அதிரடி நடவடிக்கைகளை கையிலெடுக்க இருவருக்குள்ளும் இடைவெளி ஏற்படுகிறது. இதனிடையே இந்திய ராணுவத்தின் விமானப் படைப்பிரிவில் சேர்கிறார் சூர்யா.

 

சூர்யாவும் தன்னுடைய அப்பாவை போல அனைத்து வசதிகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வசதியற்றவர்களும் விமானத்தில் பயணிக்க ஏதுவாக குறைந்த கட்டண விமான சேவையை தொடங்க முயற்சிக்கிறார். ஆனால் ஏற்கனவே விமான சேவை நடத்திவரும் பெருமுதலாளிகள் அவரது முயற்சிக்கு முட்டுகட்டையாக நிற்கின்றனர். சூர்யா விமான சேவையை தொடங்கினாரா? என்பது தான் படத்தின் திரைக்கதை, க்ளைமாக்ஸ்!

சமூகத்தின் மீது அக்கறை கொண்டுள்ள சில நடிகர்களில் சூர்யாவும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதை இந்தப்படத்திலும் இயக்குனர் சுதா கொங்கரா வாயிலாக சொல்லியிருக்கிறார். கதைக்கு பொருத்தமான நடிகர்களை தேர்ந்தெடுத்துள்ள இயக்குனரின் தேவைகேற்ப…  அனைவரும் நடித்துள்ளனர்.

சூர்யா, அபர்னா பாலமுரளி இருவரின் காதல் காட்சிகளில் இருக்கும் முரட்டுத்தனமான லவ்… வாவ்! ரசிக்க வைக்கின்றன. காட்சிகளை இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம்.

சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் DGCA (Directorate General of Civil Aviation) லைசென்ஸ் வாங்க காத்திருக்கும் காட்சியில் சூர்யா தன்னுடைய இயலாமை, கோபம் என முகத்தில் கொண்டுவந்து ரசிகர்களின் அனுதாபத்தை பெறுகிறார். சூர்யாவும் இயக்குனர் என்ன கேட்டாரோ… அதையே கொடுத்துள்ளார்!

ஷாலினி உஷாதேவி, ஆலிஃப் ஸ்ருதி, கணேஷா ஆகியோருடன் இனைந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா. இயக்குனர் கேட்டதை எல்லாம் செய்து கொடுக்கக்கூடிய  வசதியான, நல்ல தயாரிப்பாளர் இருந்தும், ஒரு நல்ல வாய்ப்பை பயண்படுத்திகொள்ளாமல் விட்டிருக்கிறார்.. இயக்குனர் சுதா கொங்கரா!

சூர்யாவுக்காக பார்க்கலாம்!