‘சொர்க்கவாசல்’ – விமர்சனம்!

‘ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ்’ , ‘திங்க் ஸ்டுடியோஸ்’ இனைந்து தயாரித்திருக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்  வெளியிட்டுள்ளனர். இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவியாளர் சித்தார்த் விஸ்வநாத், தமிழ் பிரபா மற்றும் அஷ்வின் ரவிசந்திரனுடன் இணைந்து எழுதி, இயக்கியிருக்கிறார்.

சொர்க்கவாசல் திரைப்படத்தில், ஆர்ஜே பாலாஜி, செல்வராகவன், நட்டி, கருணாஸ் , சானியா ஐயப்பன், ஷராபுதின், சந்தான பாரதி, ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், அந்தோணி தாசன் ஜேசுதாசன், ரவி ராகவேந்திரா, சாமுவேல் ராபின்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

1999 ஆம் ஆண்டில், சென்னை மத்திய சிறைச்சலையில், கைதிகளுக்கும் சிறை காவலர்களுக்கும் நடந்த கலவரத்தில், ஒரு சிறைத்துறை அதிகாரியும் 9 கைதிகளும் பலியாக,  பலர் காயமுற்றனர். இந்த சம்பவத்தை, இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத், தனது கற்பனகளால் தொகுத்து கொடுத்திருப்பது தான், சொர்க்கவாசல்.

ஆர் ஜே பாலாஜியும் அவரது அம்மாவும் ரோட்டு ஓரத்தில் டிபன் கடை நடத்தி வருகிறார்கள். இந்தக்கடையை விரிவு படுத்தி ஓட்டலாக மாற்றுவதற்கு, வங்கிக்கடன் பெற்றுத்தர ஒரு சமூக நல ஆர்வலர் பலாஜிக்கு உதவுகிறார். வங்கி, ஆர் ஜே பாலாஜிக்கு உதவ முன் வருகிறது. இந்நிலையில், அந்த சமூக ஆர்வலர் கொடூரமாக கொல்லப்படுகிறார். அந்த கொலைப்பழி ஆர் ஜே பாலாஜி மீது விழுகிறது.

ஆர் ஜே பாலாஜி, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைக்குள் இருப்பது பாலாஜிக்கு கொடும் நரகத்தில் இருப்பதை போல் இருக்கிறது. அரசியல் செல்வாக்கு பெற்ற சிறை அதிகாரிகள், தாதாக்கள், குற்றவாளிகள் வன்முறை, கோஷ்டி மோதல், போதை மருந்து பிரயோகங்கள், தகாத பழக்கங்கள் என அனைத்து குற்றச்செயல்களும் சிறைத்துறை அதிகாரிகளின் சம்மதத்துடன் நடை பெற்று வருகிறது. இந்த ஜெயிலில், போதை மருந்து விற்கும் தாதாவாக செல்வராகவன் இருக்கிறார். ஜெயில் முழுவதும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது. தனது சகாக்களுடன் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், புதிதாக சிறை எஸ் பி நியமிக்கப்படுகிறார். அவர், ஜெயிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறார். அப்போது செல்வராகவனின் ஆட்களில் ஒருவனை அடித்து கொல்கிறார். இதனால், செல்வராகவன் எஸ் பி மீது கடும் கோபத்தில் இருக்கிறார். இருவருக்குள்ளும் கடும் பகை உருவாகிறது. ஆர் ஜே பாலாஜியை ஜாமீனில் விடுவதாக கூறும் எஸ் பி, செல்வராகவனின் சாப்பாட்டில் பேதி மருந்த்தினை கலக்கச் செய்கிறார். அதன் பிறகு செல்வராகவன் இறந்து விட, அவரது கோஷ்டியினர் எஸ்பி யையும், ஆர் ஜே பாலாஜியையும் கொல்ல முயற்சிக்க, ஜெயிலுக்குள் பெரும் கலவரமாக முடிகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? என்பதே ‘சொர்க்கவாசல் ‘ படத்தின் கதை.

ஆர் ஜே பாலாஜிக்கு அழுத்தமான கதாபாத்திரம். பெரும்பாலானக் காட்சிகள் தவிர, ஒரு சில காட்சிகளில் அந்தக் கதாபாத்திரத்திற்கான நடிப்பினை கொடுக்க முடியாமல் திணறியிருக்கிறார். இதுவரை பார்த்த பாலாஜியிடமிருந்து, சற்றே வித்தியாசமான நடிப்பு. பாராட்டலாம்.

செல்வராகவன், 20 கொலைகளை செய்த கொடூர குற்றவாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லுக்கில், டெரராக இருக்கும் அவர் பெரிதாக ஈர்க்கவில்லை! அவரது கதாபாத்திரத்திற்கான கேமராக் கோணங்களிலும், வசனங்களிலும் இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். தேர்ந்த, ஒரு நடிகரை சரியாக பயண்படுத்தவில்லை!

பாலாஜி சக்திவேல், கைதிகளுக்கு சமையல் செய்யும் ‘குக்கர்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அசத்தலாக நடித்திருக்கிறார்.

அரசியல்வாதிகளின் ’கைக்கூலி’, சிறை அதிகாரி கதாபாத்திரத்தில் கருணாஸ். அவரது பார்வையிலும், உடல்மொழியாலும் அந்த கதாபாத்திரம் மிளிர்கிறது.

ஆர் ஜே பாலாஜியின் காதலியாக, சானியா ஐயப்பன். குறை சொல்ல முடியாத நடிப்பு!

சிறைக் கலவர, விசாரணை அதிகாரியாக நட்டி நட்ராஜ். விசாரணைக்கு வருபவர்கள் நடத்தையிலேயே, அவர்கள் உணமை சொல்கிறார்களா, இல்லையா? என்பதை அவரது நடிப்பின் மூலமாக நமக்கு புரிய வைத்து விடுகிறார். சிறப்பான நடிப்பு.

செல்வராகவனுக்கு நெருங்கிய கூட்டாளி பாத்திரத்தில், கொடூரமான வில்லனாக ஹக்கீம் ஷா மிரட்டுகிறார். அதேபோல், எஸ் பி கதாபாத்திரத்தில் ஷரப் உதீன் சிறப்பாக நடித்திருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்கள் கவனிக்க வைத்தாலும், பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை!

சிறையில் நடக்கும் அக்கிரமங்களை அப்பட்டமாக காட்சிப்படுத்தியிருந்தாலும், அதை காட்சிப்படுத்திய விதம், ரசிகர்களை நம்ப வைக்க மறுக்கிறது. அதேபோல் காட்சிகளை யூகிக்க முடிவதால் சலிப்பு ஏற்படுகிறது.

படத்தின் பெரும்பலமாக ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சனின் ஒளிப்பதிவு, கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை, கலை இயக்குநர் எஸ் ஜெயச்சந்திரன் கலை அமைப்பும் அமைந்துள்ளது.

மொத்தத்தில், ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் மூலம் ‘சிறைச்சாலை’ உள்ளே நடக்கும் அரசியலை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார், இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்.