தயாரிப்பாளர்கள் என் வி பிரசாத் மற்றும் தனய்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர் எனப்படும் ரணம் ரத்தம் ரௌத்திரம்’. இந்தப்படத்தில் நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவன், பாலிவுட் நடிகை அலியா பட், தமிழ் திரையுலக நடிகர் சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, மரகதமணி இசை அமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதி ‘உயிரே..’ என தொடங்கும் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக அப்படத்தின் இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுலி பேசுகையில்,”ஆர் ஆர் ஆர் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் ஏராளமாக உண்டு. ஒவ்வொரு ஆக்சன் காட்சிக்கும் பின்னணியில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் எமோஷனல் இருக்கும். இந்த எமோஷன் தான் படத்தின் உயிர் நாடி. படத்தின் இந்த குவி புள்ளிக்கு இசை அமைப்பாளர் மரகத மணி தன்னுடைய நுட்பமான இசை திறனால் இசை வடிவம் கொடுத்திருக்கிறார். அதற்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி அற்புதமான வரிகளை எழுதி இருக்கிறார். இது ரசிகர்களை கவரும்” என்றார்.
ஆர் ஆர் ஆர் படத்தின் ஆன்மா என இயக்குனர் ராஜமவுலி கருதி வெளியிட்டிருக்கும் ‘உயிரே…’ பாடலை பார்வையிட்ட பார்வையாளர்கள் இந்த படம், தமிழில் ஏற்கனவே வெளியான ‘சிறைச்சாலை’ படத்தினை எதிரொலிப்பது போல் உள்ளதாக இணையத்தில் பின்னூட்டமிட்டு வருகிறார்கள். இருப்பினும் ‘பாகுபலி’ தந்த படைப்பாளி என்பதால் ராஜமௌலியின் கற்பனை, ரசிகர்களின் விழிகளை விரியச் செய்து வியப்பில் ஆழ்த்தும் என உறுதியாக எதிர்பார்ப்போம்.