மே 7 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பு!

2021 – 2025 க்கான தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்றது.

இந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது.

இந்நிலையில் தமிழக டிஜிபி திரிபாதி, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பல உயரதிகாரிகள், புதிய முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

பொதுப்பணித்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் மு.க.ஸ்டாலினை சந்தித்து, முதல்வர் பதவி ஏற்பிற்கான மரபு ரீதியான அலுவல் தொடர்பான பணிகளை செய்து வருகின்றனர்.

வெற்றி பெற்ற திமுகவினர் அனைவரும் சான்றிதழ்களைப் பெற்ற பிறகு நாளை மே 4 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்.

அதில் மு.க.ஸ்டாலின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதன்பின் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அநேகமாக மே 7 ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பார் என தெரிகிறது.