‘ஸ்டார்’ –  விமர்சனம்!

‘ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்’ மற்றும்’ ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, இயக்குநர் இளன், கதை எழுதி இயக்கியிருக்கும் படம், ‘ஸ்டார்.’ ‘டாடா’ படத்திற்கு பிறகு ரசிகர்களிடம் நன்கு அறியப்பட்ட கவின் கதாநாயகனாக நடித்திருக்க, அவருடன், அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு செய்துள்ளார், எழில் அரசு.

போட்டோகிராபரான லால் மகன் கவினுக்கு, சினிமா நடிகராக வேண்டும் என்பது லட்சியம். அதை நோக்கி அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு, பல்வேறு இடையூறுகளால் தடை ஏற்படுகிறது. அந்த தடைகளை தகர்த்து, அவர் நடிகரானாரா, இல்லையா? என்பதே ஸ்டார் படத்தின் கதை.

1990 களில்,  தொடங்கும் கதை. அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்கிறது. இதற்காக, கவின் பல கெட்டப்புகளுடன், கலையரசன் என்ற கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு நடித்துள்ளார். கல்லூரியில்  சுற்றிவரும் காலத்திலும், மும்பையில் நடிப்பு கல்லூரியில் சேர எடுக்கும் முயற்சி முதல், ஒவ்வொரு கட்டத்திலும் அவரது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். க்ளைமாக்ஸ் நெருங்கும் காட்சிகளில் கண்ணாடியை பார்த்து அழும் போதும் நடிப்பினை பொறுத்த்வரை குறை சொல்ல முடியாதபடி நடித்துள்ளார்.

நாயகன் கவினின் கதாநாயகிகளாக அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள இருவருமே, குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்துள்ளனர். இதில் ப்ரீத்தி முகுந்தனுக்கு கூடுதலாக நடிக்க நல்ல வாய்ப்பு. அதை அவர் சரியாக செய்துள்ளார்.

நாயகன் கவினின் தந்தையாக லால், தாயாக கீதா கைலாசம், நாயகி ப்ரீத்தி முகுந்தன் தந்தையாக ராஜா ராணி பாண்டியன், மற்றும் மாறன் ,காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், தீப்ஸ், ராஜா ராணி பாண்டியன், சஞ்சய் ஸ்வரூப், தீரஜ் உள்ளிட்டவர்கள் திரைக்கதைக்கு உதவியிருக்கிறார்கள்.

‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்ட இயக்குநர் இளன், இளைஞர்களுக்கான அறிவுரை கூடிய விஷயத்தை அனைவருக்குமாக கொடுத்திருக்கிறார். அதாவது, எந்தத் துறையானாலும், தன்னம்பிக்கையோடு விடாமல் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்ற கருத்தினை வலியுறுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. மேலும், கல்லூரி கலை நிகழ்ச்சி விழாவில், பெண்களை ஊக்கப்படுத்தும் வசனம் பாராட்டத்தக்கது. அதோடு சினிமாவில் சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். என்ற எதார்த்தங்களையும், காதல் சுகுமார்  கதாபாத்திரம் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்த நிலையில், காட்சிகளோடு பாடல்களை கேட்கும் போது அவரின் ரசிகர்கள் தியேட்டரில் ஆர்ப்பரிக்கிறார்கள். பின்னணி இசை, காட்சிகளுக்கு ஏற்றபடி இருக்கிறது.

ஒளிப்பதிவாளர், எழில் அரசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

சிறப்புத் தோற்றத்தில், இயக்குநர் வெற்றிமாறன் தோன்றி பேசும் வசனம், சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு ஊக்கமருந்து.

இயக்குநர் இளன் க்ளைமாக்ஸில், செம்ம.. டிவிஸ்ட், வைத்திருக்கிறார்!

ஸ்டார் – அறிமுக நடிகர்களுக்கான ஊக்கம்!