‘அக்கினிப் பிரவேசம் செய்ய எண்ணியே ஜெய் பீம் உருவானது!’ – சூர்யா

ஜெய் பீம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் சூர்யா முதல் முறையாக வழக்கறிஞராக நடித்துள்ளார்.

அது குறித்து அவர் கூறியுள்ளதாவது….

‘ஜெய் பீம்’ படத்தில் நடிக்க ஆரம்பிப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்னதாகவே, நீதிபதி சந்துருவை சந்தித்தேன். இயக்குநர் த.செ.ஞானவேல் தான் அதற்கு ஏற்பாடு செய்தார்.

என்னிடம் நீதிபதி சந்துரு பற்றி கூறும்போது.. ‘ அவர் வழக்கறிஞராக இருந்த காலத்தில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளுக்கு வக்கில் ஃபீஸ் பெற்றதில்லை என்பதைத் தெரிவித்தனர். அவரது இளமைக் கால துடிப்பைப் பற்றி பேசியும், படித்தும் தெரிந்து கொண்டேன். அவருடைய கதை இந்த உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றுசேர வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.

நீதிபதி சந்துரு போன்றோர் போற்றுதலுக்கு உரியவர்கள். ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை! நாங்கள் அவருடைய கதையைச் சொல்லி இளம் மனதில் அக்கினிப் பிரவேசம் செய்ய எண்ணினோம். அதன் சாட்சிதான் ஜெய் பீம். இத்திரைப்படத்திற்காக நாங்கள் உயர் நீதிமன்ற வளாக செட் போட்டுள்ளோம். இது தமிழ்த் திரைப்படத்தில் இதுவரை யாரும் செய்திராதது. எனவே, இவையெல்லாம் சேர்ந்துதான் என்னை முதல்முறையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்கவைத்தது” என்றார்.

‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது.