தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குநராக இருக்கும் அனல் அரசு, ‘பீனிக்ஸ்- வீழான்’ தமிழ்த் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தினில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
‘பீனிக்ஸ் – வீழான்’ திரைப்படத்தில் சூர்யா விஜய்சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், அபி நட்சத்திரா, வர்ஷா, நவீன், நந்தா சரவணன், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘ஆடுகளம்’ நரேன், ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இத்திரைப்படத்தை, ‘ஏ கே பிரேவ்மேன் பிக்சர்ஸ்’ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திருமதி ராஜலக்ஷ்மி அனல் அரசு தயாரித்திருக்கிறார்.
‘பீனிக்ஸ் – வீழான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, படப்பிடிப்பிற்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் அனல் அரசின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதனை, இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகும் சூர்யாவின் தந்தையும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் சேதுபதி வெளியிட்டார்.
அதில் இடம்பெற்ற ஆக்ஷன் – எமோஷன்- சென்டிமென்ட் கலந்த காட்சிகளும், சூர்யா விஜய் சேதுபதி குத்துச்சண்டை வீரர் வேடத்திலும் நடித்திருப்பது விஜய் சேதுபதி ரசிகர்களிடத்தில் ஒரு பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.
யுடியூபில் வெளியான, இந்த டீசர் குறுகிய காலத்திற்குள் லட்சக்கணக்கான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.