டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ சூர்யா’ஸ் சாட்டர்டே’ எனும் திரைப்படம் இம்மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையடுத்து, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா, நடிகைகள் பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில்,
‘கேங் லீடர்’ படத்திற்கு பிறகு நானியுடன் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் சாருலதா என்கிற ஒரு அழகான கதாபாத்திரத்தில் பெண் காவலராக நடித்திருக்கிறேன். இயக்குநர் விவேக் இந்த கதாபாத்திரத்தை நேர்த்தியாக எழுதியிருக்கிறார். படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் , மக்களுக்கும் இந்த கதாபாத்திரம் ரசிக்கும் வகையில் இருக்கும்.
எஸ் ஜே சூர்யாவுடன் ‘டான்’ படத்திற்குப் பிறகு நான் நடிக்கும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா உடன் நிறைய காட்சிகளில் இணைந்து நடித்திருக்கிறேன். ஏராளமான சுவாரசியமான திருப்பங்களும் இருக்கும். அனைவரும் பார்த்து ரசித்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகர் எஸ். ஜே. சூர்யா பேசுகையில்,
நானி, ஏற்கனவே தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர். என்றாலும் அவரை மீண்டும் மனதார வரவேற்கிறேன். இங்கு உள்ள ரசிகர்கள் அனைவருக்கும் நானி பரிச்சயமானவர். அற்புதமான நடிகர். தெலுங்கில் அவருக்கு ‘நேச்சுரல் ஸ்டார்’ என பட்டம் வழங்கி இருக்கிறார்கள். நானி, தன்னுடைய திரையுலக வாழ்க்கையை உதவி இயக்குநராக தொடங்கி.. படிப்படியாக உயர்ந்து இன்று நட்சத்திர நடிகராக வளர்ந்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்களிடம் ஏராளமான அன்பை சம்பாதித்து இருக்கும் அவர்,தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து வருகிறார்.
‘விருமாண்டி’ படத்தில் நடித்து பிரபலமான அபிராமி சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இயக்குநர் விவேக் ஆத்ரேயா- தெலுங்குக்காரராக இருந்தாலும் சென்னையில் படித்த பையன். அவர் சென்னை வாசி தான். அவருக்கு தமிழ் மக்களை மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா- அபிராமி- பிரியங்கா மோகன் -அதிதி பாலன் -என தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார்.
இதுவரை பல ஆக்ஷன் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அனைத்திற்கும் அடிப்படை மாணிக்கம்- பாட்ஷா தான். மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘பாகுபலி’ படத்திலும் இந்த அடிப்படை தான் இருந்தது. அதாவது பாட்ஷாவாக இருப்பார். ஆனால் சூழ்நிலைக்காக தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு மாணிக்கமாக வாழ்ந்து கொண்டிருப்பார். இது எப்போதும் வெற்றி பெறும் சினிமா சூத்திரம்.
இயக்குநர் விவேக் ஆத்ரேயா இந்த ஃபார்முலாவில் வித்தியாசத்தை புகுத்தி இருக்கிறார். அது என்னவெனில் ஒரு பையன் அதீத கோபக்காரன். அவனது அம்மா ‘கோபப்படாதே’ என்று சொன்னால் அவன் கேட்பதாக இல்லை. அதனால் அவனது தாயார், ‘நீ கோபப்படு. அதனை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோபப்படாதே. வாரத்திற்கு ஏதேனும் ஒரு நாள் மட்டும் கோபப்படு’ என சொல்கிறார். அது என்ன கிழமை என்றால் சனிக்கிழமை அது ஏன் என்பதற்கு நீங்கள் படத்தை பார்த்தால் புரியும். அதனால், மாணிக்கமாக இருப்பார். சனிக்கிழமை மட்டும் அவர் பாட்ஷாவாக மாறுவார். இதுதான் இந்தப் படத்தின் கான்செப்ட்.
இந்த படத்தில் தயா எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். எனக்கும் ஒரு கோபம் இருக்கிறது. எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய விசயம் கிடைக்காததால் நான் அரக்கத்தனமாக நடந்து கொள்கிறேன். இந்த இரண்டு கோபமும் ஒரு புள்ளியில் மோதினால் … என்ன நடக்கும் என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.
கடந்த காலங்களில் நாகார்ஜூனா நடிப்பில் தமிழகத்தில் வெளியான ‘உதயம்’ படத்திற்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ… அது போன்றதொரு வித்தியாசமான அனைத்து ரசிகர்களையும் கவரக்கூடிய படம்தான் இது. அதனால்தான் இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகிறது. இந்தப் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன். ” என்றார்.
நடிகர் நானி பேசுகையில்,
‘ ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வருகை தரும் போதெல்லாம் தமிழ் மக்களின் அன்பை வியந்து பார்க்கிறேன். தமிழ் சினிமாவை நான் தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறேன். நான் நடித்த படங்களை பார்த்துவிட்டு வெளியே வந்து படத்தைப் பற்றி பேசும் தமிழ் மக்களின் கருத்துக்களை நான் யூடியூபில் பார்த்து தெரிந்து கொள்வேன். குறிப்பாக படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் ரியாக்ஷனை கவனிப்பேன்.
‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ ஸ்பெஷலான திரைப்படம். தமிழ் படங்களில் இருப்பது போல் எளிமையான ஆக்சன் படங்களை இந்த கால ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். அந்த வகையில் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ எளிமையான ஆக்சன் என்டர்டெய்னர்.
இந்தப் படத்தை பொருத்தவரை நான் செகண்ட் ஹீரோ தான். எஸ் ஜே சூர்யா தான் ஹீரோ. இந்தப் படத்தின் டைட்டில் எஸ் ஜே சூர்யாவுக்கு தான் பொருத்தமானது. என்னைப் பொறுத்தவரை இது எஸ் ஜே சூர்யாவின் சாட்டர்டே. அவர் திரையில் தோன்றும் போது வழங்கும் உத்வேகம் அலாதியானது. இந்தப் படத்தில் அவருடன் நடித்த போது சில விசயங்களை கற்றுக் கொண்டேன்.
பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கு இறைவன் நவரச பாவங்களையும் வெளிப்படுத்தும் முக அமைப்பை கொடுத்திருக்கிறார். அவருடைய சிறிய கண் அசைவே ஏராளமான விசயங்களை சொல்லி விடும். அவர், இந்தப் படத்தில் ஏற்று நடித்திருக்கும் ‘சாருலதா’ எனும் கதாபாத்திரம் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்கும்.
அதிதி பாலன், ‘பத்ரா’ எனும் கதாபாத்திரத்தில் என்னுடைய சகோதரியாக நடித்திருக்கிறார். அவர் தெலுங்கில் நடிக்கும் இரண்டாவது படம் இது. அவருடனும் இணைந்து நடித்ததற்காக பெருமிதம் அடைகிறேன். இந்தப் படத்தில் நான் -அதிதி பாலன்- பிரியங்கா மோகன் -அபிராமி -சாய்குமார் – குடும்பமாக நடித்திருக்கிறோம்.
அபிராமி – கமலுடன் விருமாண்டி படத்தில் நடித்த தருணத்திலிருந்து நான் அவருடைய ரசிகன். அந்தப் படத்தில் அவருடைய அற்புதமான நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இந்தப் படத்தில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட முக்கியமான காட்சியில் அவருடைய நடிப்பு பிரமாதமாக இருந்தது.
சூர்யா சாட்டர்டே தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் கண்டு ரசித்து விட்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழகம் முழுவதும் படத்தை வெளியிடுவம் விநியோகஸ்தர் சுப்பையாவிற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.