தமிழ் சினிமாவில் கதையையும் விறுவிறுப்பான திருப்பங்களையும் அக்குவேறாக ஆணிவேறாக யோசிக்கத் தெரிந்த நம்ம ஊர் இயக்குநர்களுக்கு, அந்த கதைக்கு ஏத்த மாதிரி ஒரு நாலு வார்த்தையில புதுசா தலைப்பை யோசிக்க மட்டும் ஏன் மூளை வேலை செய்ய மாட்டேங்குது என்பதுதான் பலரது நக்கலான கேள்வியாக இருக்கிறது.
அந்த வரிசையில், முன்னணி இயக்குநரான சுசீந்திரன், தனது புதிய திரைப்படத்திற்கு ‘ஒரு கைதியின் டைரி’ என்று பெயரிட்டு, உலகநாயகன் கமல் ஹாசனின் 80-களின் பழைய பிளாக்பஸ்டர் படத் தலைப்பை அப்படியே சுட்டுள்ளார். கதைக்கும் பழைய படத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, தலைப்பு மட்டும்தான் பொருத்துகிறது என்று படக்குழுவினர் சொன்னாலும், புதுசா டைட்டில் யோசிக்கத் துப்பில்லாமல் பழைய ஹிட் படங்களின் முகவரியை இயக்குநர்கள் கடன் வாங்குவதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் செமையாக நையாண்டி செய்து வருகிறார்கள்.
இத்தகைய விவாதங்களுக்கு மத்தியில், இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர் முன்னிலையில் வெளியிட்டு படத்திற்குப் பெரிய விளம்பரத்தைத் தேடிக் கொடுத்துள்ளார். KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாகக் களம் இறங்குகிறார். அவருடன் இணைந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் ஒரு மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்க, மதுரையை மையமாகக் கொண்ட ஒரு எதார்த்தமான வாழ்வியலாக இக்கதை உருவாக்கப்பட்டு வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள இந்த சுவாரசியமான மோஷன் போஸ்டரில், மதுரையின் அடையாளமான பிரம்மாண்ட கோவில் கோபுரங்களின் பின்னணியில் சீமான் மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகிய இருவரின் தோற்றங்களும் மிக அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. டைரியின் பக்கங்களை நினைவுபடுத்தும் வகையிலான ஒரு பழைய கையெழுத்துப் பிரதியின் வடிவமைப்புடன் இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது, பார்ப்பவர்களுக்குக் கதைக்களம் குறித்த பலத்த ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஏற்கனவே ‘நான் மகான் அல்ல’ மற்றும் ‘பாண்டியநாடு’ ஆகிய வெற்றித் திரைப்படங்களில் தந்தை – மகன் பாசத்தையும், அதன் பின்னணியில் நடக்கும் அதிரடிப் பழிவாங்கல்களையும் விறுவிறுப்பாகக் காட்டி அசத்திய இயக்குநர் சுசீந்திரன், மீண்டும் அதே தனக்கே உரிய டிரேடுமார்க் பாணியில் உணர்வுகளும் ஆக்ஷனும் நிறைந்த ஒரு பக்கா கமர்ஷியல் படமாக உருவாக்கி வருகிறார்.
இந்த ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.