‘சுழல் 2’ – தி வோர்டெக்ஸ் ‘தொடரினை, ‘வால்வாட்சர் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது. புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதியிருக்க, பிரம்மா மற்றும் சர்ஜுன் கேஎம் இயக்கியுள்ளனர். இந்தத் தொடரில், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால், சரவணன், கௌரி கிஷன் , சம்யுக்தா விஸ்வநாதன் , மோனிஷா பிளெஸ்ஸி , ரினி , ஷ்ரிஷா, அபிராமி போஸ் , நிகிலா சங்கர் , கலைவாணி பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்க, மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
பிரபல வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளுருமான செல்லப்பாவும் (லால்), சப் இன்ஸ்பெக்டர் சக்கரையின் (கதிர்) அப்பாவும் நண்பர்கள். ஒரு நாள் சப் இன்ஸ்பெக்டர் சக்கரை, செல்லப்பாவை சந்திக்க அவரது வீட்டிற்கு வருகிறார். அப்போது அங்கே, உள் பக்கமாக பூட்டிய வீட்டிற்குள், செல்லப்பா நெற்றிப்பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பிணமாக கிடக்கிறார். அதிர்ச்சியடையும் சக்கரை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கிறார். இன்ஸ்பெக்டர் ‘பருத்தி வீரன்’ சரவணன், இந்த கொலை வழக்கை விசாரிக்க துவங்குகிறார். சமூக செயற்பாட்டாளர் செல்லப்பா, அந்த ஊரின் முக்கிய புள்ளி என்பதால், போலீஸ் டி எஸ்பி, புலன் விசாரணையில் நன்கு அனுபவம் பெற்ற, சப் இன்ஸ்பெக்டர் சக்கரையிடம் இந்த கொலை வழக்கை ஒப்ப்டைக்கிறார்.
சப் இன்ஸ்பெக்டர் சக்கரை துரிதமாக செயல்பட்டு, கோவில் திருவிழாக்களில் நடனமாடும் பெண்ணை (கௌரி கிஷன்), கைது செய்கிறார். அந்தப்பெண் தொடர்ந்து பேச மறுப்பதால், கொலை வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் இருக்கிறது. இந்நிலையில், 7 பெண்கள் செல்லப்பாவை நாங்கள் தான் கொன்றோம். என, தனிதனியாக வெவ்வேறு காவல் நிலையங்களில் தாங்களாகவே வந்து ஆஜராகிறார்கள். போலீசார் குழம்புகிறார்கள். செல்லப்பாவின் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி யார்? அவரை கொல செய்ய காரணம் என்ன? என்பது தான், ‘சுழல் 2’ – தி வோர்டெக்ஸ் .
முதல் தொடர் சற்று மெதுவாக செல்கிறது. அதன் பிறகு, அடுத்தடுத்த தொடர்கள் விறுவிறுப்பாகவும், திருப்பங்களுடனும் செல்கிறது. குறிப்பாக, லால் சுட்டுக்கொல்ல்ப்பட்ட பிறகு, கதையின் வேகம் அதிகரிப்பதுடன், கொலையாளி யார்? என்ற நமது யூகங்கங்கள் அனைத்தும் பொய்யாகிறது. க்ளைமாக்ஸ் வரை யூகிக்க முடியவில்லை.
அபிரஹாம் ஜோசப்பின் ஒளிப்பதிவு, நன்றாக இருக்கிறது. குறிப்பாக திருவிழாக் காட்சிகள் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டிருக்கிறது.
சாம் சி எஸ்சின் இசை, படத்தின் பலமாக இருக்கிறது. முக்கியமாக பின்னணி இசை, காட்சிகளுக்கு மேலும் வலுவூட்டுகிறது.
படத்தொகுப்பு செய்திருக்கும் ரிச்சர்ட் கெவின், தேவையற்ற பல காட்சிகளை அப்படியே விட்டிருக்கிறார். அதை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக திருநங்கைகள் ஜெயில் காட்சிகள்.
சண்டைக்காட்சிகளை தினேஷ் சுப்புராயன், திலிப் சுப்புராயன், மிராக்கிள் மைக்கேல் ஆகியோர் செய்திருக்கிறார்கள். ஜெயில் சண்டைக்காட்சி ரசிக்கும்படி இருக்கிறது.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஓகேவான நடிப்பினை கொடுத்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ்,ஜெயில் சண்டைக்காட்சியில் கவனம் பெறுகிறார்.
லால், சரவணன், அலட்டலில்லாமல் நடித்துள்ளனர்.
லாலின் மனைவியாக நடித்திருக்கும், ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் அறிமுக நாயகி அஸ்வினி @ ருத்ரா கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி, ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.
கௌரி கிஷன், முத்து என்ற கதாபாத்திரத்தில், அதிகமான வசனங்கள் பேசாமலேயே நடித்திருக்கிறார். ரசிகர்களிடம் கவனம் பெறுகிறார்.
திரைக்கதைக்கு முக்கிய பங்களித்திருக்கும், மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து, கவனம் பெறுகிறார்கள்.
சம்யுக்தா விஸ்வநாதன் , மோனிஷா பிளெஸ்ஸி , ரினி , ஷ்ரிஷா, அபிராமி போஸ் , நிகிலா சங்கர் , கலைவாணி பாஸ்கர் ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்திருக்கிறார்கள்.
சில பிசோட்களில் தொய்வு ஏற்படுகிறது. 8 எபிசோட்களில் 2 எபிசோட்களை கட் பண்ணி இருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
இணையத்தொடர் என்றாலே ஆபாசம், வன்முறைக் காட்சிகள் அதிகம் இருக்கும். ஆனால், அதை தவிர்த்திருக்கும் இயக்குநர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் ஆகியோரை பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘சுழல் 2’ – தி வோர்டெக்ஸ் ஒரு ஆவரேஜான க்ரைம் ட்ராமா!