கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளு வேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி கொடுக்கக்கூடிய சூழ்நிலை தான் நிலவுகிறது. இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல செயல்களை செய்கிறார்கள். இதில் ஒன்று தான் ‘புளுவேல்’ விளையாட்டு. ஆனால், இந்த விளையாட்டால் தங்கள் உயிரையும் இழந்து விடுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய விஷயம். அதை மையப்படுத்தி ஒரு சமூக திரில்லர் படமாக உருவாகும் படம் தான் ‘புளு வேல்’. சில மணி நேரத்தில் நடக்கும் கதையே இப்படம். அதை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும். மேலும், தங்கள் குழந்தைகள் ஆடம்பரமாகவும், அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இருவருமே சம்பாதிக்கின்றனர். அதைவிட, விலைமதிக்க முடியாத அன்பு, கவனிப்பு, பாசம் மற்றும் நேரத்தை அவர்களுடன் செலவழிக்காதது பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு சேர்க்கும் என்ற விபரீதத்தை அறியாதிருக்கிறார்கள்.
சமீக காலமாக தன் நடிப்புத் திறமையால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் பூர்ணா. அவர் இந்த படத்தில் காவல்துறை உதவி ஆணையாளராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவன் கதாபாத்திரத்தில் மாஸ்டர் கபீஷ் கன்னா நடிக்கிறார். இவரின் பெற்றோராக கேரளாவைச் சேர்ந்த பிர்லா போஸ் மற்றும் திவ்யா நடிக்கின்றனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள் : இயக்கம் – T.ரங்கநாதன், இசை – PC ஷிவன், ஒளிப்பதிவு – KK, படத்தொகுப்பு – ‘ஜோக்கர்’ படம் மூலம் பிரபலமான சண்முகம், கலை – NK ராகுல். பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.மது மற்றும் 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் P. அருமை சந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பும், வெளியாவதற்கான பணிகளும் ஒரே நேரத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.